முன்னூறு வருசத்துக்கு முன்னாடி ஏழுமலைக்கு அந்தப் பக்கம் ஒரு மலை, அங்க ஒரு மரக்கிளையில ஒரு பரண். அதுல ஒருத்தன் தூங்கறான்.
20 வருசத்துக்கு முன்னாடி ஏழு கடலுக்கு அந்தப்பக்கம் ஒரு கடல். அங்க ஒருத்தன் தூங்கிக்கிட்டு இருக்கான்.
இப்ப இந்த ரயிலின் கடைசிப் பெட்டில ஒருத்தன் தூங்கிட்டிருக்கான்.
இதுல ஸ்பெஷல் என்னன்னா அந்த மூணு பேரும் ஒருத்தன் தான்.
-இப்படி சொல்லித்தான் கதையையே ஆரம்பிக்கிறார்கள்.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் ஒரு மனிதனுக்கும் தற்கால அவசர உலகில் சுயநல மனிதன் ஒருவனுக்கும் நடக்கும் உரையாடல் மூலம் பல்வேறு உயரிய கருத்துகளை நமக்குள் விதைத்து போகிறது திரைக்கதை.
சரி, கதைக்குள் கொஞ்சம் வருவோமா…
எல்லா உயிர்களையும் நேசிக்கத் தெரிந்தவனே மனிதன். அப்படி ஒரு சாகாவரம் பெற்ற மனிதனை, சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் அந்த மனிதனை உதாரண புருஷன் ஆக்கி கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்.
சினிமாவுக்குள் வந்தா’ராம்’ போனா’ராம்’ என்றிருக்கும் பலருக்கு மத்தியில் 20 ஆண்டுகளாக தனது படைப்புகள் மூலம் நிலைத்து நிற்கிறார் இயக்குனர் ‘ராம்.’ அவர் எடுத்துக் கொள்கிற கதைக்களமே அவரது அடையாளம் என்ற நிலையில் அவரது படைப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரியதாகி விடுகிறது.
கதை சிம்பிளோ சிம்பிள்.
4000 ஆண்டுகளாக உயிரோடு வாழ்ந்து வரும் நிலையிலும் தன் காதலி அஞ்சலி மீது மீது உள்ள காதலை மட்டும் ஜீவன் வற்றாமல் தனக்குள்ளே வைத்திருக்கிறார் நிவின் பாலி.
காதலியை தேடும் அவருக்கு காதலியும் அவ்வப்போது தரிசனம் தருகிறார். ஆனால் வருகிறார். யாரோ மாதிரி பேசிப்போகிறார்.
இது நிவின் பாலிக்கு ஏமாற்றம் அளித்தாலும், அதற்காக அஞ்சலி மீது அவர் கொண்ட காதல் அதுவும் யுகங்களை கடந்த காதல் இல்லை என்றாகி விடுமா…
என்ன…
உண்மைக் காதலுக்கு அது மட்டும் போதாதே. எண்ணெய் இல்லாமல் எரியும் தீபமாயிற்றே காதல்.
அந்தக் காதலை தனக்குள் சுமந்து கொண்டு எங்கேயாவது இம்முறையும் சந்தித்து விடலாம் என்ற நோக்கில் ரயில் ஒன்றில் பயணப்படும் நிவின் பாலிக்கு இப்போது கனவில் காதல் தரிசனம் தருகிறார், அஞ்சலி.
இந்த கனவை கலைக்கும் விதமாக அதே ரயிலுக்குள் வந்து சேர்கிறார் சூரி.
மனைவி குழந்தையை விட்டுவிட்டு 8 ஆண்டுகள் துபாயில் வேலை செய்தவர் இப்போது ஊருக்கு வருவதற்காக இந்த ரயில் பயணம்.
இந்த பயணம் நிவின் பாலிக்கும் சூரிக்கும் இடையே நிகழும் முட்டல் மோதலை சுயநலத்துக்கும் பொது நலத்துக்கான பார்வையின் அடிப்படையில் நம் கண் முன் நிறுத்துகி றார், இயக்குனர் ராம்.
இது ஒரு புறம் இருக்க, இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்தாலும், நிவின் பாலி வாழ்க்கையில் அஞ்சலியின் மீதான காதல் மட்டும் மாறவே இல்லை.
ஒவ்வொரு காலகட்டத்திலும் அஞ்சலியை தேடிக்கொண்டே இருக்கிறார்.
இந்த தேடலில் அவர் அஞ்சலியை கண்டுபிடித்து தனது நேற்றைய இன்றைய காதலி அவர்தான் என்பதை வெளிப்படையாக சொன்னாரா என்பது கிளைமாக்ஸ்.
யதார்த்தமான கதாபாத்திரங்களின் உணர்வுகள் எப்போதுமே ராமின் திரைப்படங்களில் ஸ்பெஷல்.
அந்த ஸ்பெஷலை இந்தப் படத்திலும் மனம் நிரப்பி தந்திருக்கிறார், ராம்.
கூடுதல் அம்சமாக இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்பதை எலி வழியாகவும் அவருக்கே உரிய கவித்துவம் குறையாமல் எடுத்து சொல்லி இருக்கிறார்.
மாறுபட்ட இரு கதாபாத்திரங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது நடக்கும் விஷயங்கள் எதிர்பார்ப்பை உண்டாக்கினாலும், நிவின் பாலியிடம் சிக்கிய சூரி பத்திரமாக ஊர் திரும்ப வேண்டுமே என்ற கவலையும் நம்மை அப்பிக் கொள்வது நிஜம்.
நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி என அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சரியாக செய்துள்ளனர்.
இவர்களை தாண்டி அந்த எலியும் ஒரு கதாபாத்திரமாக மாறி நம்முடன் பயணிக்கிறது.
படத்திற்கு மிகப்பெரிய பலம்’ ஒளிப்பதிவும் இசையும்.
மழை பின்னணியில் பயணிக்கும் அந்த ரயில் காட்சிகள் சுகுமாரின் ஒளிப்பதிவில் அத்தனை அழகு.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கராஜா
வின் பின்னணி இசையும், சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்களும் கதையை வழிநடத்தும் பணியை கச்சிதமாக செய்கின்றன.
எழுதி இயக்கியிருக்கிறார் ராம்.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் உரியது என்ற கருத்தை எலி வழி சிந்தனையாகவும் தர முடியும் என்றால், அங்கே இருக்கிறார் நம் இதயத்தில் ராம்.
அஞ்சலியின் கருணை சுரக்கும் அன்பு, அரவணைப்பாக அந்த பேச முடியாத பெரியவர் மீது வெளிப்படும் இடம், நிச்சயம் அன்பின் இலக்கணம்.
பிளஸ்:
4000 வருஷ மனிதனை நடிப்பால் சுமந்த நிவின் பாலி கேரக்டர்.
பிளாஷ்;
மனிதம் விதைக்கும் அஞ்சலி கேரக்டர்.