காவல் துறையின் அலட்சியத்தால் பாதிக்கப்படும் ஒரு இளைஞன், வளைகுடா நாட்டில் இருந்து திரும்பி வரும் மற்றொரு இளைஞன் என இருவரை சுற்றி கதை நகர்கிறது. இரண்டு வெவ்வேறு பிரச்சினைகளை ஒரே புள்ளியில் இணைக்கிற வித்தையில் மனதுக்குள் மேடை போட்டுவிடுகிறது, படம்.
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் தாயார் காலமாகி விடுகிறார். அவர் உடலை வைக்க பிரீஸர் பாக்ஸை எடுத்துக் கொண்டு அந்த மலைகிராமத்துக்குச் செல்கிறார் விதார்த். இந்நிலையில் சம்பந்தமில்லாத வழக்கில் விதார்த்தையும் ம் அவர் மாமாவையும் போலீஸ் தேட…
ஊருக்குத் திரும்பினால் இவர்களை போலீசிடம் சிக்குவது நிச்சயம் என்பதால் சவுதியில் இருந்து யோகிபாபு வரும்வரை நாலு நாட்கள் அங்கேயே விதார்த் தங்க வேண்டியதாகிறது.
ஊருக்கு வந்த யோகிபாபு என்ன செய்கிறார்? தங்கராஜை தேடும் போலீஸ் என்ன செய்கிறது என்பதை காமெடி டிராக்கில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கதையை இவ்வளவு சுவாரஸ்யமாகச் சொல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார் இயக்குநர் டி.அருள் செழியன்., சடலம் சுமக்கும் ‘பிரீஸர் பாக்ஸூக்கு ‘சென்டிமென்ட் டச்’ கொடுத்து திரைக்கதை அமைத்திருப்பது திரைக்குப் புதுசு.
விதார்த், யோகிபாபு, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த மனிதர்கள். அத்தனைபேரும் நடிப்பில் புதுக்களம் காண்கிறார்கள்.
ஒரு சிறு பட்ஜெட் படத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வாழ்வியலை எளிய மனிதர்களின் வழியே சொல்லி பிரமிக்க வைத்து விடுகிறார், இயக்கிய அருள் செழியன். பாடகர் அந்தோணிதாசனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. குறிப்பாக ‘‘சிவப்பழகி’ ஆடவும் வைக்கிறாள்.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை இயல்பாக சொன்ன விதத்துக்காகவே விருது தரலாம்.
குய்கோ, நீ ஜெய்க்கோ.