வல்லவன் வகுத்ததடா திரை விமர்சனம்

நல்லது செய்தால் நல்லது நடக்கும்” என்ற விஷயத்தை கருவாக எடுத்துக்கொண்டு, 6 கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையே ‘வல்லவன் வகுத்ததடா’.

பணம் வரும் வழி முக்கியமில்லை. பணம் தான் முக்கியம் என்று பயணிக்கும் ஐந்து பேர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவி செய்வதோடு, நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்ததோடு, மேலும் மேலும் துன்பப்படும் நிலைக்கு வருகிறார்.

இந்த ஆறு பேரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என்றாலும் பணம் இவர்களுக்கிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்துகிறது. அதனால் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை விறுவிறு திரைக்கதையில் தந்திருக்கிறார், அறிமுக இயக்குநர் விநாயக் துரை.

அனன்யா மணியின் காதலில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரது அழகிலும், பேச்சிலும் சொக்கிப் போன அவரது காதலன் அவருக்குப் பிடித்த நகையை வாங்கிக் கொடுக்கிறார். இழந்த அவர்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கிறார். அப்புறம் தான் தெரிகிறது. அத்தனையும் பணத்தாசை கொண்ட அனன்யா நடத்திய காதல் நாடகம் என்பது.

இன்னொரு பக்கம் இன்ஸ்பெக்டர் நீதிமணி பாத்திரத்தில் வரும் ராஜேஷ் பாலச்சந்திரன். தன் கையில் சிக்கும் கேஸ்கள் எல்லாரிடமும் இவரது வசூல் வேட்டை பிரமிக்க வைக்கிறது.

மூன்றாவது கதையில் டாக்சி ஓட்டும் சுவாதி மீனாட்சிக்கு அந்த வேலையும் போய் விட, அதே நேரம் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன சகோதரி கர்ப்பிணியாக திரும்பி வர, வாட்ச்மேன் வேலை பார்க்கும் அப்பாவுடன் எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று தெரியாமல் திண்டாடுகிறார்.

தேஜ் சரண்ராஜும், ரெஜின் ரோசும் திருடர்கள். கார்த் திருட்டு, வழிப்பறி என்று பலவகையிலும் அடுத்தவரின் பணத்தை அபேஸ் பண்ணி வருகிறார்கள்.
ஐந்தாவது பகுதியில் வரும் விக்ரம் ஆதித்யா பெரிய செல்வந்தர். பணத் தேவை உள்ளவர்களுக்கு எல்லாம் அவசரத்துக்குப் பண உதவி செய்து அதைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களின் உடல் உறுப்புகளைக் கழற்றி விற்றுக் காசு பார்த்து வருகிறார்.

இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஹைப்பர் லிங்க் தொடர்பு இருக்கிறது. அது எப்படி ஒரே நேர்கோட்டில் வந்து முடிகிறது என்பதுதான் படத்தின் கதைக்களம். நடித்தவர்கள் அத்தனை பேரும் பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வுகள். இவர்களில் அந்த மலை முழுங்கி மகாதேவி பாத்திரத்தில் அனன்யா அப்பட்டமாகப் பொருந்தி இருக்கிறார்.

ஆனால் படத்தில் எல்லோரையும் தூக்கிச் சாப்பிடுபவர் இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் தான். பணத்துக்கு அலையும் அந்த கேரக்டரை கவனமாக செய்து மனதை ஈர்க்கிறார். தன் வறுமையிலும் சீருடை இல்லாத பள்ளி மாணவனுக்கு சீருடை வாங்கி தருகிற அந்த கேரக்டரில் சுவாதி மீனாட்சி நடிப்பில் தனித்து தெரிகிற இன்னொருவர்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்துவின் கேமரா காட்சிகளுக்கு உயிரோட்டம் தர, இசையமைத்த சகிஷ்னா சேவியர் பின்னணி இசையில் கதையின் கனத்தை அதிகரித்து விடுகிறார். எழுதி இயக்கியிருப்பதோடு தயாரிக்கவும் செய்திருக்கும் விநாயக் துரை, வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்திருப்பது வெற்றியின் விஸ்வரூபம்.

Comments (0)
Add Comment