மதுரையில் சேகரன் என்பவர், தன் மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க செல்லும்போது காணாமல் போகிறார். கடன் தந்து மற்றவர்களின் சொத்தை நயவஞ்சகமாக அபகரிக்கும் கரிமேடு தியாகு என்பவரை கைது செய்து விசாரணை செய்கிறது போலீஸ். இந்தச் சூழ்நிலையில் மதுரையில் ஓர் இளம்பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இப்பெண்ணின் காதலன், தந்தை என அனைவரையும் விசாரணை செய்கிறது காவல் துறை.
எந்தத் துப்பும் கிடைக்காத சூழலில் ஒரு நொடி, ஒரு விஷயம் காவல் துறை அதிகாரி மனதில் பிளாஷ் அடிக்கிறது. இந்த விஷயம் குற்றவாளியைப் பிடிக்க உதவுகிறது. அந்த விஷயம் என்ன என்பது படத்தின் சுவாரசிய ட்விஸ்ட்.
படம் முழுக்க நாயகன் தமன் குமாரின் போலீஸ் விசாரணை தான் படமே. ஒவ்வொரு கட்ட விசாரணையிலும் வந்துபோகும் ட்விஸ்டுகள் திரைக்கதையை சுவாரசியமாக்கி விடுகின்றன. அந்த போலீஸ் அதிகாரிகேரக்டருக்கு நடிப்பால் சிறப்பு சேர்த்து விடுகிறார் தமன்குமார்.
கந்து வட்டி தொழில் நடத்துபவராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தி, தனது கோபத்தையும், திமிரையும் வெளிப்படுத்தும் இடங்கள் மிரட்டல்.
எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் அறிமுகம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் போகப்போக அந்த கேரக்டர் பத்தோடு பதனொன்றாகி விடுகிறது.
சேகரன் என்ற வேடத்தில் கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அந்த கேரக்டரின் ஜீவன் அறிந்து நடிப்புச் சிறப்பு செய்திருக்கிறார்..
நாயகியாக நிகிதா, அழகான நடிப்பில் வசீகரிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி உணர்ச்சிகரமாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
சலூன் கடைக்காரராக விக்னேஷ் ஆதித்யா கிளைமாக்சில் மனசில் பதிந்துபோகிறார்.
ஒளிப்பதிவாளர் கே.ஜி.ரத்தீஷ் கேமராவில் ஜாலம் காட்ட, சஞ்சய் மாணிக்கம் இசையில், சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் ரசனைக் களஞ்சியம்.
ஒரு குற்ற வழக்கில் பயணிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த வழக்கை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பல திருப்பங்களோடு சொல்வதோடு, அத்தனை யூகங்களையும் உடைத்தெறிந்து, யூகிக்க முடியாத புதிய கோணத்தில் படத்தை முடித்ததில் இயக்கச் சிறப்பு பெறுகிறார், பி.மணிவர்மன்.
ஒரு நொடி, ஆச்சரியம்.