நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தியானது பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்வாக ‘பாக்’ நதியிலிருந்து அந்த தீய சக்தி தப்பித்து விட…அது சுந்தர்.சி.யின் அரண்மனை குடும்பத்தில் எந்த மாதிரியான சேதாரங்களை ஏற்படுத்தி வைக்கிறது என்பது திகில் திரைக்கதை.
வழக்கறிஞர் சுந்தர்.சி., சென்னையில் தன் அத்தை கோவை சரளா வீட்டில் இருக்கிறார். காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை தமன்னா மீது கொள்ளைப் பிரியம். அந்த பாசத் தங்கையும் அவள் கணவனும் அடுத்தடுத்து இறந்து விட்டதாக செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்கு போகிறார்.
இருவரின் மரணத்திலும் சந்தேகமிருப்பதையும் தங்கையின் குழந்தைகளுக்கு ஆபத்திருப்பதையும் உணரும் சுந்தர்.சி., அதில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற முற்படும்போது மர்ம மரணங்களும், அமானுஷ்ய சம்பவங்களும் தொடர்கின்றன. தொடர் மரணங்களுக்கும் பாக்கிற்கும் என்ன சம்பந்தம்? தொடர் மரணங்களுக்கு சுந்தர்.சி. முடிவு கட்டினாரா என்பது என்பது திகுதிகு திகில் களம்.
முந்தைய அரண்மனை படங்களை போன்றே இதிலும் திகில் காட்சிகளுக்கும், காமெடிக்கும் குறைவில்லை. யோகி பாபு, வி.டி.வி.கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சேஷு ஆகியோர் காமெடிக் களத்தில் சிரிக்க வைக்கிற பணியை செவ்வனே மேற்கொள்கிறார்கள். இத்தனை பேரிலும் தனித்து தெரிகிறார் சேஷூ. அவர் கோவை சரளாவை காதலிக்கும் காட்சிகளில் வெடித்துச் சிரிக்கிறது , திரையரங்கம். 2 குழந்தைகளுக்கு தாயாக தமன்னாவுக்கு நடிப்பில் புது புரமோஷன். பயாக வரும இடங்களிலும் நடிக்கத் தெரிந்த நடிகை என நிரூபிக்கிறார்.
இன்னொரு நாயகியாக வரும் ராசி கன்னாவுக்கு பெரிதாக வேலை இல்லை. கே.ஜி.எப். வில்லன் கருடா ராமச்சந்திர ராஜூ சாமியார் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
படத்திற்கு பெரிய பலமாக இருப்பது அந்த அடர்ந்த காடும், இருட்டும். குறிப்பாக, இடைவேளைக்கு முன்பு வரும் 20 நிமிடங்கள் மிகுந்த விறுவிறுப்பாக அமைந்து இயக்கிய சுந்தர்.சி.க்கு பெருமை சேர்த்து விடுகிறது.
கிருஷ்ணசாமியின் கேமரா இரவு நேர திகில் காட்சிகளை திகிலாக நம் இதயம் வரை கடத்துவதில் முதலிடம் பிடிக்கிறது.
‘ஹிப் ஹாப்’ ஆதியின் பின்னணி இசை ஆவிகள் தொடர்பான காட்சிகளில் அநியாயத்துக்கு பயமுறுத்தி வைக்கிறது. உணர்வு பூர்வமானவமான காட்சிகளிலும் காமெடிக் காட்சிகளிலும், திகில் கதையோட்டத்திலும் இயக்குனராக சுந்தர்.சி. பரிமாறியிருப்பது ஸ்பெஷல் விருந்து.