கன்னி திரை விமர்சனம்

மனித நடமாட்டம் இல்லாத அந்த மலைப்பாதையில் தன்னுடன் கைக்குழந்தை ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.
மாலை மயங்கி இருட்டாகிறது. அப்போது அங்கே எதிர்ப்படும் பெரியவர் ஒருவர், இளம்பெண் சேம்பியிடம், எங்கே செல்கிறாய்? என்று கேட்கிறார். அவள் விவரம் சொன்னதும், ஊர் வரை வந்து விட்டு விட்டுப் போகிறார்.

நள்ளிரவில் அந்த மலைக்காட்டுக்குள் உள்ள வீடு வந்து சேர்ந்த சேம்பியைப் பார்த்து அக்கம்பக்கத்தார் அதிர்ச்சி அடைகிறார்கள். நீ தனியாகவா வந்தாய்? என்று பயம் விலகாமல் கேட்க, அவளோ ‘என்னை ஒரு பெரியவர் கொண்டு வந்து விட்டார்’ என்கிறாள்.

ஆனால் அவள் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து, ‘அந்தப் பெரியவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறதே’ என்கிறார்கள். அப்போதே கதைக்குள் ஒரு அமானுஷ்யம் வந்து குத்துக்காலிட்டு அமர்ந்து விடுகிறது.
இப்போது முன் கதைக்கு வருவோம்.
நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமான கதைக்களம் படத்தை தொடக்கமுதலே எதிர்பார்க்க வைத்து விடுகிறது.
மலை கிராமத்தில் வசிக்கும் செங்கா என்கிற வயதான பெண்மணி தெய்வீகத் தன்மை உள்ள மருத்துவப் பெட்டியின் உதவியோடு மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கி வருகிறாள். தீராத நோய் ஒன்றால் அவதிப்படும் ஒரு செல்வந்தர் அந்த கிராமத்துக்கு வரும்போது நோயின் கொடுமையால் மயங்கி விழுகிறார். அவருக்கு செங்கா கொடுத்த மருந்தில் அவரது நோய் தீர்ந்து விடுகிறது.
தீர்க்கவே முடியாதநோய் என்று செல்வந்தருக்கு சொல்லப்பட்ட நோய், மூலிகை மருந்தில் குணமானது தெரிய வந்ததும் மருத்துவ உலகம் ஸ்தம்பித்து நிற்க, அந்த மந்திரப் பெட்டியை அபகரிக்க சதி வேலைகளும் தொடங்குகின்றன. இதில் சேம்பியின் அண்ணனும் அண்ணியும் கொல்லப்படுகிறார்கள். அந்த மூலிகை ரகசியத்தையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அண்ணனின் இரு குழந்தைகளுடன் தப்பித்து வெளியூர் ஓடுகிறாள் சேம்பி.அப்படித்தான் ஜவ்வாது மலைப் பக்கம் உள்ள தன் தாத்தா ஊருக்குச் செல்கிறாள். அங்கே சென்றாலும் அவளை அந்தக் கும்பல் தேடி வந்து துரத்துகிறது.

அவள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள்? அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாளா? அந்த மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாளா என்பது மீதிக் கதை.

படத்தில் சேம்பியாக வரும் அஷ்வினி சந்திரசேகர் தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்
வேடனாக வரும் மணிமாறன், அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ் கேரக்டர்களாகவே மாறித் தெரிகிறார்கள்.
வில்லனாக ராம் பரதன் இன்னொரு நடிப்பு ஆச்சரியம்.
படத்தின் பிரதான அம்சமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று கதையின் நிகழ்விடங்கள் தான். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளை அழகியல் மிளிர படம் பிடித்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.

படத்தில் வரும் பாத்திரங்கள் அதிகம் பேசுவதில்லை ஆனால் நறுக்கெனப் பேசுகின்றன.தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னட மொழி வாசனை வீசும் அவர்கள் பேசும் மொழியே படத்திற்கு வேறு நிறத்தினைக் கொடுத்து விடுகிறது.
குறிப்பிட வேண்டிய இன்னொருவர் இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ். உச்சகட்ட காட்சியில் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. அவரது பின்னணி இசை தான் பேசுகிறது.
படத்தில் சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேச முயன்றுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே அழுத்தமாகச் சொல்லப்படாதது சிறுகுறை. ஆனாலும் சொன்ன விதத்தில் இது மலைத்தேன்.

Comments (0)
Add Comment