சிக்கலான உள்ளாட்சி அரசியல் குறித்தும் அதன் பிரதிநிதிகள் குறித்தும் பேசும் படமாக, தேர்தல் நேரத்தில் வந்து பரபரப்பை கூட்டியிருக்கும் படம் ‘எலக்சன்’.
கட்சியின் தீவிரத் தொண்டனாக முதுமை வரை பணியாற்றியும் கடைசிவரை தொண்டன் என்ற நிலையிலேயே இருக்கிறார், ஜார்ஜ் மரியான். அவரது மகன் விஜய்குமாருக்கோ அரசியலில் பெரிய ஆர்வமில்லை. ஆனால், தங்கை கணவரின் தூண்டுதலால், தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊராட்சித் தலைவர் தேர்தலில் நிற்கிறார்.
விஜயகுமாரின் இந்த திடீர் முடிவு அவருக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகப் பெரிய சிக்கல்களை உண்டாக்குகிறது. இதில் சில உயிர்களும் போகின்றன. தடைகளைக் கடந்து தேர்தலில் விஜயகுமார் வென்றாரா? என்பது விறுவிறு திகுதிகு திரைக்கதை.
தனது முதல் படமான ‘சேத்துமான்’ மூலம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் உணவு அரசியலை வெளிப்படையாக பேசிய இயக்குநர் தமிழ், இம்முறை தேர்தல் அரசியல் என்ற கதைக்களத்தை திரைக்கு எடுத்து வந்துள்ளார். உள்ளாட்சி அரசியல் எந்த அளவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் படம் நிற்கிறது.
நாயகனாக விஜய்குமார் இயல்பான நடிப்பில் மிளிர்கிறார். ‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானிக்கு இதிலும் அழுத்தமான கதாபாத்திரம். ஹீரோவின் அப்பாவாக ஜார்ஜ் மரியான், மாமாவாக பாவெல் நவகீதன், திலீபன், நாச்சியாள் சுகந்தி என அனைவரும் பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் இசையும், மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவும் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கும் வித்தையை செய்து விடுகின்றன. உள்ளாட்சி அமைப்பு குறித்தும் அதை சுற்றி நடக்கும் சாதி அரசியல், உள்ளடி வேலைகள் பற்றியும் துணிச்சலாக பேசிய விதத்தில் போட்டியில்லாமலே இந்த எலக்சனில்வெற்றி பெற்று விடுகிறார், இயக்குனர்.