தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கிஷோர் ஓர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க கிஷோரின் மகள் ரம்யா நம்பீசன், அவரது தங்கை கணவர், மற்றும் முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் திரை மறைவில் இருந்தபடி காய் நகர்த்துகிறார்கள்.
முதல்வர் பதவி மீது ஒரு கண் இருந்தபோதிலும், ஒரு பக்கம் தன் தந்தையை தண்டனையில் இருந்து காப்பாற்றவும் முயற்சி செய்கிறார் ரம்யா.
இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் பல கொலைகளை செய்து தப்பி வந்த துர்கா என்ற பெண்ணை தேடி, சிபிஐ போலீஸ் அலைகிறது. அதுமட்டுமல்லாமல், தொடர்ச்சியாக முன்னாள் எம்.பிக்களையும் அந்த துர்கா அதிரடியாக கொன்று குவித்து வருகிறார்.
தமிழகத்தில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரியான பரத். இத்தனை தேடல்களும் ஒரு புள்ளியில் வந்து இணைகிறது. முதல்வருக்கு தண்டனை கிடைத்ததா? புதயி முதல்வர யார்? போன்ற கேள்விகளுக்கு சுவாரசிய விடை, தொடரில்.
முதல் காட்சியில் ஜார்கண்ட்டில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும்போதே இது வழக்கமான படமல்ல என்று புரிந்து விடுகிறது.
முதல்வர் பாத்திரத்தில் கிஷோர் நடிப்பில் வெகுஜோர். தனக்குப் பின் கட்சியின் நிலைமை, ஆட்சியின் நிலைமை என மனசுக்குள் கலங்கி நிற்கும் அந்த ஒரு இடம் போதும் இவருக்கு.
முதல்வரின் தோழி என்ற அந்த கொற்றவை கேரக்டரில் ஸ்ரேயா ரெட்டியை ரொம்பவே ரசிக்கலாம்குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவர் நடிப்பு வேறு லெவல்.
ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், Y G மகேந்திரன் என நடித்தவர்கள் அனைவருமே கதைக்குள் நம்மை ஈர்க்கிற நடிப்பை தந்திருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், சிபிஐ. அதிகாரியாக வரும் ஆதித்யா மேனனின் விசாரணை கோணங்கள் ரசிக்க வைக்கின்றன.
ஜிப்ரானின் இசை, வொய்ட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு, ரவிக்குமாரின் படத்தொகுப்பு இந்த மூன்றும் சேர்ந்து இந்த திரில்லர் கதையை தூக்கி நிறுத்தி விடுகின்றன. இயக்கிய வசந்தபாலன், தேர்ந்த அரசியல் ஞானத்தோடு செய்திருக்கும் இயக்கப் பணி சிறப்பானது. வசந்தபாலன். வாழ்ந்து மறைந்த சில முதல்வர்கள் நினைவில் வந்து போகிறார்கள்.
இந்த தலைமைச் செயலகம், இதுவரை வந்த அரசியல் தொடர்பான தொடர்களில் தலையாயது.