சாமான்யன் திரை விமர்சனம்

ஒரு சாதாரண மனிதன் பெரிய தொகையை டெபாசிட் செய்யப் போவதாக சொல்லி அந்த வங்கிக்குள் நுழைகிறான். நுழைந்தவன் தன்னிடமுள்ள டைம் பாமையும் துப்பாக்கியையும் காட்டி மிரட்டி வங்கியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.

அதே நேரத்தில் அவனுடைய நண்பன் ஒருவன் அதே வங்கியின் மேனேஜர் வீட்டுக்குள் துப்பாக்கியோடு நுழைந்து மேனேஜரின் மனைவிக்கு மரணபயம் காட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.

இன்னொரு நண்பன் அதே வங்கியின் அசிஸ்டென்ட் மேனேஜர் வீட்டுக்குள் துப்பாக்கியோடு நுழைந்து மேனேஜரின் கர்ப்பிணி மனைவிக்கு உயிர் பயம் காட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான்.

மூவருமாக சேர்ந்து வங்கியிலிருந்து பெரியளவில் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்று பார்த்தால், அப்படி எதையும் செய்யாமல் தங்கள் தரப்பிலிருந்து உயிரிழந்த உயிர்களுக்கு நியாயம் கேட்கிறார்கள். சில கோரிக்கைகளையும் முன் வைக்கிறார்கள்.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் காவல்துறை இறங்க…

வங்கியையும், வங்கி மேனேஜர்களின் வீட்டையும் சுற்றி வளைத்த அந்த பேருக்கும் வங்கிக்கும் என்ன சம்பந்தம்? வந்தவர்கள் நோக்கம் என்ன?

கேள்விகளுக்கு விடையே ராமராஜனை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கும் சாமானியன்.

மீண்டும் ராமராஜன் என்பது இந்த கதையின் முதல் பலம். 12 வருடங்கள் கழித்து வந்திருக்கும் உருட்டலும் மிரட்டலுமான முகபாவங்களால் அந்த சங்கர நாராயணன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். “உன் டவுசரை அவிழ்த்துடுவோம்” என்று மிரட்டும் போலீசுக்கு ‘‘என் வாழ்க்கை டவுசரோட தான் தொடங்கியது, இன்று வரை நல்லபடியாக போயிட்டு இருக்கு, அதனால் எனக்கு அது பெரிய விசயமே இல்லை” என்று ராமராஜன் கொடுக்கும் பதிலடிக்கு திரையரங்கில் கரகோஷம் காது பிய்க்கிறது.

ராமராஜனின் நண்பர்களாக ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் பொருத்தமான பாத்திரப்படைப்பில் மிளிர்கிறார்கள். கட்டுமான நிறுவன உரிமையாளராக வருகிற மைம் கோபி வில்லத்தனத்தின் புதிய விலாசமாகி இருக்கிறார். போலீஸ் உயர்அதிகாரியாக கே.எஸ்.ரவிகுமார் சிறப்பு.

லோனில் வீடு வாங்கி, கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பரிதாப முடிவை தேடிக்கொள்ளும் இளஞ்ஜோடியாக லியோ சிவகுமார், நக்க்ஷா சரண் அனுதாபம் தேடிக்கொள்கிறார்கள்.

அநீதிக்கு துணை போகும் பேங்க் மேனேஜராக போஸ் வெங்கட், அவரது மனைவியாக வினோதினி, நிரூபராக அபர்ணதி கதைக்களத்தில் இணைந்து போகிறார்கள்.

இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் மனதுக்கு இதம். அதுவும் ராஜாவின் பழைய பாடல்கள் வரும் போதெல்லாம் தியேட்டர் குதூகலிக்கிறது..

கச்சிதமான ஒளிப்பதிவும், நேர்த்தியான எடிட்டிங்கும் படத்துக்கு கூடுதல் பலம்.

சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்பதை வாழ்நாள் கனவாக கொண்டிருப்பவர்கள், தங்கள் தகுதிக்கு மீறி லோன் வாங்கும்போது சந்திக்கிற கஷ்ட நஷ்டங்களை இயல்பாக காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குநர் ராகேஷ், தமிழ்த் திரைக்கு நம்பக வரவாகி இருக்கிறார்.

சராசரி மக்களின் பாதுகாவலன் இந்த சாமான்யன்.

Comments (0)
Add Comment