‘‘என் வாழ்வில் இது தான் சிறந்த தந்தையர் தினம்’’

மகன் சூர்யா அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ பட டீசர் விழாவில் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகத்திற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளரான அனல் அரசு இயக்குகிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து ஆக்ஷன் – திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
மகன் நடித்திருக்கும் படத்தின் டீசரைக் காண விஜய்சேதுபதி இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தார். சூரியாவும் ‘தந்தையர் தின’ பரிசாக இந்த டீசரை விஜய்சேதுபதிக்குக் காண்பித்திருக்கிறார்..

விழாவில் விஜய் சேதுபதி பேசுகையில், “மகன் சூர்யா நடிக்க வந்தது திட்டமிடாமல் நடந்தது தான். நானும், அனல் அரசும் ஒரு பயணத்தில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு வந்தோம். அப்போது அனல் அரசு எனது மகனுக்கான கதை ஒன்று இருப்பதாகவும், இந்தப் படத்துக்கு அவர் சரியாக இருப்பார் என்றும் கூறினார்.
நான் அவரிடம், ‘சூர்யாவிடம் கேளுங்கள் அவனுக்கு சரி என்றால் எனக்கும் சரி தான்’ என்று அனலிடம் சொன்னேன். சூர்யாவுக்கு கதை பிடித்து அப்போது ஆரம்பமானது தான் இந்த படம். அவன் ஹீரோவாவான் என்று நான் துளியும் கற்பனை செய்யவில்லை.
எனது பையன் இந்தத் துறைக்கு வரும்போது, ‘இங்கு சர்வைவ் ஆவது ரொம்ப கஷ்டம்’ என்று தான் கூறினேன். ஏனெனில் நான் இங்கு சர்வைவ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது நான் சொல்லி அவனுக்கு தெரியும். இதில் ஒவ்வொரு முறையும் நிறைய அழுத்தங்களை எதிர்கொள்கிறோம். எனது மகனுக்கு இந்தத் துறையில் எவ்வளவு பாரம் இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. இந்த டீசரை பார்த்து உண்மையில் நான் மகிழ்ந்தேன். சூர்யா பிறந்து 19-வது தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளேன். இதுதான் எனது மிகச்சிறந்த தந்தையர் தினம்” என்றார்.
விஜய்சேதுபதியின் மகன் சூர்யா பேசகையில், ” தந்தையர் தினத்திற்கு அப்பாவுக்கு ஒரு நல்ல சர்ப்ரைசான பரிசு ஒன்றைக் கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால் தான் இந்த விழாவிற்கு அவரை அழைத்து டீசரை அவருக்கு போட்டுக் காண்பித்தோம். இப்படத்தின் பூஜை அன்று ‘நான் வேற அப்பா வேற’ என்று ஜாலியாகத்தான் கூறியிருந்தேன். ரொம்ப சீரியஸாக அதைக் கூறவில்லை. எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பு என்பதால் ஒரு பதற்றத்தில் இருந்தேன். அதனால் என் முகம் கொஞ்சம் சீரியசாகத் தெரிந்திருக்கும். மற்றபடி நான் ரொம்ப ஜாலியான பையன்’ என்றார்.

Comments (0)
Add Comment