‘‘சார் சொல்லாதே…மாமா சொல்லு…’’

மகளை திருத்திய நடிகர் அர்ஜூன்

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடந்தது.

இது காதல் திருமணம். இருவருமே நட்சத்திரங்கள் என்றாலும் சினிமா இவர்களுக்குள் காதலை கொண்டு வரவில்லை. அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அறிமுகமானார்.அப்போது உமாபதி-ஐஸ்வர்யா மனதளவில் நெருக்கமானார்கள். உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்கும் பிடித்துப் போக கல்யாணத்துக்கு டபுள் ஒ.கே. சொன்னார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. (இந்த கோயிலை கட்டியது அர்ஜூன் தான் என்பது முன்குறிப்பு.)

இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் ஐஸ்வர்யா- உமாபதி, அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஐஸ்வர்யா பேசுகையில், ‘‘மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நீங்கள் அனைவருமே சிறிய வயது முதல் பார்த்து வருகிறீர்கள். நீங்கள் எல்லாருமே எனக்கு குடும்பம் மாதிரிதான். நான் பள்ளி செல்லும் போது கல்லூரி செல்லும் போது நீங்கள் என்னை பார்த்திருக்கிறீர்கள் . திருமணம் என்ற நிலை எனக்கு தற்போது புதிய அனுபவமாக இருக்கிறது. உங்களுடைய ஆசிர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அப்பாவுக்கும் ராமைய்யா சாருக்கும் எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அது போல் எங்களுக்கும் கொடுங்கள் என்றார்.

அப்போது குறுக்கிட்ட அர்ஜுன், ‘சார் இல்லை மாமா’ என்றார்.

உடனே வெட்கத்தில் சிரித்த ஐஸ்வர்யா, ‘‘யெஸ் மாமா’’ என்றார். மேலும் ஐஸ்வர்யா தொடர்கையில், ‘‘எனது கருத்துகளை, விருப்பங்களை வெளிப்படுத்த எனது அப்பா, அம்மா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். எனது கருத்துகளுக்கும் இடமளித்திருக்கிறார்கள். அதே போல் எனக்கு என் புகுந்த வீட்டில் ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது. உமா(பதி) எனது நண்பர். எல்லா விஷயத்திலும் எனக்கு நிறைய ஆதரவு கொடுப்பார். நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான்’’ என பேசி முடித்தார். தம்பதிகளுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment