ரயில் திரை விமர்சனம்

கிராமத்து நாயகன் குங்குமராஜ் வேலை செய்து வந்தாலும், மது பழக்கத்திற்கு அடிமை. இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் நண்பருடன் சேர்ந்து மது குடிப்பதையே தனது மகிழ்ச்சியாக்கி கொள்கிறார்.

இதனால், அவரது மனைவி வைரமாலாவுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் கூட மதிப்பதில்லை.
இதனால் நாயகன் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் பர்வேஸ் மெஹ்ரூ மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வைரமாலாவோ வட மாநில வாலிபரை தனது சொந்த தம்பி போல எண்ணி பழகுகிறார்.

தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், பர்வேஸ் வைரமாலாவிடம் ஒரு பணப்பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று விபத்தில் மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அவரது மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் வருகிறார்கள்.

இறுதிச் சடங்கு முடிந்த பிறகு பர்வேஸ் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்க, அப்போது தான் வைரமாலாவுக்கு பர்வேஸ் தன்னிடம் கொடுத்த பை நினைவுக்கு வருகிறது. ஆனால் அவர் வைத்த இடத்தில் அந்த பை இல்லை. அந்த பையில் இருந்த ஐந்து லட்சத்தை தனது குடிகாரக் கணவன் தான் எடுத்திருப்பார் என்று அவரிடம் சண்டை போட, அவரோ நான் எடுக்கவில்லை என சாதிக்கிறார். சத்தியமும் செய்கிறார்.

அந்த பணம் என்ன ஆனது? நிராதரவாக சொந்த மாநிலம் போகும் பர்வேஸ் குடும்பத்திற்கு வைரமாலா என்ன செய்தார்? என்பது நெகிழ வைக்கும் திரைக்கதை.

நாயகனாக குங்குமராஜ், நாயகியாக வைரமாலா இருவருமே அந்த அழகிய கிராமத்து எளிய வார்ப்பாக மனதில் நிற்கிறார்கள். முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு அந்த குடிகார நடிப்பில் குங்குமராஜ் ஈர்ப்பு காட்டுகிறார். விபத்தில் இறந்து போன இளைஞனின் குட்டி மகளுக்கும் அவருக்குமான அன்பு நெஞ்சில் புகுந்து நேசம் கூட்டுகிறது.

னைவியாக வரும் வைரமாலா திரையில் தெறிக்கும் உணர்ச்சிப் பிழம்பு எனலாம். பணத்தை தன் குடிகார கணவன் தான் எடுத்திருப்பான் என்று சந்தேப்படும் இடம் தொடங்கி முடிவு வரை அவர் நடிப்பில் வீசுவது கனல். பையை தொலைத்து விட்டு, குற்ற உணர்வில் பர்வேஸ் குடும்பத்தை பார்க்க மறுக்கும் காட்சியில் அரங்கு அதிர்கிறது, கரகோஷத்தில்.

வட இந்திய வாலிபர் வேடத்தில் பர்வேஸ் மெஹ்ரூ, நாயகனின் குடிகார நண்பராக ரமேஷ் வைத்யா, நாயகியின் தந்தையாக செந்தில் கோச்சடை, பர்வேஸின் தந்தையாக நடித்திருக்கும் பிண்ட்டூ பொருத்தமான பாத்திரத் தேர்வில் பளபளக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமராவும் எஸ்.ஜே.ஜனனியின் இசையும் படத்தின் இன்னபிற பலம்.
எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, பிழைப்பு தேடி வருவோர் மற்றும் வேறு ஊர்களுக்கு செல்வோர் பற்றிய ஒரு செய்தியை போகிற போக்கில் சொல்லாமல் நெகிழ்ச்சியாக பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த சிங்கப்பூர் ரிட்டர்ன் நண்பர் மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்திருப்பது இன்னும் அழகு.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலை செய்பவர்களை ஏளனமாக பார்ப்பவர்களின் பார்வையை இந்த படம் மாற்றும் என்பதே இயக்குனருக்கான மகுடம்.

Comments (0)
Add Comment