சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கதை நடக்கிறது. மெட்ராஸைப் பூர்விகமாகக் கொண்ட குமரன் (யோகிபாபு) தனது பாட்டியுடன் சேர்ந்து, வெள்ளையரின் பிடியில் இருக்கும் தனது தம்பியை விடுவிக்க முயற்சிக்கிறார். அந்த சமயத்தில் சென்னையின் மீது ஜப்பான் குண்டுமழை பொழியப்போவதாக செய்தி வர, அதிலிருந்து தப்பிக்க தனது படகில் கடலுக்குள் செல்ல முயல்கிறார். அவருடன் ஒரு கர்ப்பிணி (மதுமிதா), அவரது மகன், ஒரு கடவுள் மறுப்பாளர் (எம்.எஸ்.பாஸ்கர்), ஒரு பிராமணர் (சின்னி ஜெயந்த்), அவரது மகள் (கவுரி கிஷன்), ஓர் இஸ்லாமியர் (ஷா ரா), ஒரு வட இந்தியர் (சாம்ஸ்) உள்ளிட்டோரும் படகில் ஏறிக்கொள்கின்றனர். தான் வந்த படகு விபத்தானதால் பாதி தூரத்தில் ஒரு வெள்ளைக்காரரும் ஏறுகிறார்.
இதன் பிறகு வெள்ளைக்காரரால் ஏற்படும் சலசலப்பால் படகு சேதமடைகிறது. படகை கரைக்கு திருப்பவும் முடியாமல், மேற்கொண்டு நகரவும் முடியாத சூழலில் படகில் இருப்போரில் மூவர்கடலிலில் குதித்து மற்றவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நேர்கிறது.
அதேநேரம் படகில் ஒரு தீவிரவாதி மாறுவேடத்தில் இருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. அந்த தீவிரவாதி யார்? படகில் இருப்பவர்கள் இறுதியாக என்ன ஆனார்கள் என்பதே இந்த ‘போட்’
தனது முந்தைய படங்களாக ‘23-ஆம் புலிகேசி’, ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்’ போன்ற படங்களின் மூலம் சமூகத்தை போகிற போக்கில் அட்டகாசமாக பகடி செய்து கரகோஷம் வாங்கிய சிம்புதேவன், இந்த படத்தில் மனித நேயத்துக்கு மாண்பு செய்திருக்கிறார்.
ஒரு படகில் ராஜஸ்தான் சேட்டு, முஸ்லீம் இளைஞன், மயிலாப்பூர் பிராமண பேமிலி, தெலுங்கு பேமிலி, தென் தமிழக ஆள், ஒரு வெள்ளைக்காரர் பிறகு சென்னை பூர்வகுடி யோகி பாபு, அவர் தாயார் என அனைத்து தரப்பு மக்களின் எமோஷனலையும் படம் பிடித்துள்ள திரைக்கதை படத்தின் ஆனை பலம். கிட்டத்தடட படகோட்டியாகவே மாறித்தெரிகிறார், யோகிபாபு. கதையின் நாயகன் என்பதை உணர்ந்து காட்சிகளில் அடக்கி வாசிக்கிற அந்த நடிப்புக்கு ஒருசபாஷ் சொல்லித்தானாக வேண்டும். கர்ப்பிணிப்பெண்ணாக வரும் மதுமிதா, அந்த குணசித்ர பாத்திரத்தில் பிரகாசிக்கிறார்.
பிராமின் பெண்ணாக வரும் கவுரி கிஷன் அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆச்சாரம் பற்றி பேசும் சின்னி ஜெயந்த், முகமது ஜின்னா பற்றி பேசும் சா ரா, எம்.எஸ்.பாஸ்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.யோகிபாபுவின் பாட்டியாக கொளப்புளி லீலா இன்னும் கச்சிதம்.
ஜிப்ரான் இசையும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் இந்த படகை கரை சேர்க்க உதவும் கூடுதல் துடுப்புகள்.
சிம்புதேவனுக்கே உரிய சமூக அக்கறை தொடங்கி எல்லாமே படத்தில் இருக்கிறது. ஆனாலும் ஏதோ போதாமை தெரிகிறது. என்றாலும், தள்ளாட்டம் இருந்தாலும் தடையின்றி கரை சேர்ந்து விடுகிறது, இந்த போட்.