ல்தகாசைஆ திரை விமர்சனம்

விஜய்,சூர்யா ஆகியோர் நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான சொல் ‘ல்தகா சைஆ’. இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை.

இந்தப் பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார்.

நாயகன் சதா நாடார், நாயகி மோனிகா சலினா ஆகியோர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழும் இணையர். திடீரென நாயகனுக்கு வரும் கனவுகள் உடனடியாக பலிக்கத் தொடங்குகின்றன.

இரவில் கனவு காண்பார். அது அடுத்தநாள் அப்படியே பலிக்கும். நல்ல கனவுகளாக வந்தவரை சரி.
ஒரு நாள் தான் சந்தித்த பாலியல் தொழிலாளி இறந்து போக அந்தப் பெண்ணின் சடலத்துடன் காரில் வருகிற மாதிரி கனவு. அந்த கனவில் போலீஸ் விசாரணை, துப்பாக்கி சூடு என்ற கனவின் நீட்சி, விடிந்ததும் அவரை பயமுறுத்தி வைக்கிறது.

இன்னொரு நாள் ஆசை மனைவியைக் கொலை செய்வது போல் அவருக்கு கனவு வர, அதில் தான் பிரச்சினை. கணவர் அதிர்ந்து போக, மனைவி அவரை பார்த்து பயந்து போக… அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன…அந்த கனவு என்னாகிறது? என்கிறது, கிளைமாக்ஸ்.

நாயகனே இயக்குநர் என்பதால் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார். உடன் நடித்தவர் நிஜ மனைவி என்பதால் நிஜமான காதல் ஜோடியை திரையில் உணர முடிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் மோனிகா சலினா, திரைப்பட நடிகைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறார்.கதையும் காட்சிகளும் அவருக்கு நற்பெயர் பெற்றுத்தருகிற மாதிரி அமைந்திருக்கின்றன. அதை தனது நடிப்பின் மூலம் தக்க வைத்துக் கொள்கிறார்.
ஜான்சனின் இசையில் பாடல்கள் இனிமை. ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமாரின் கேமரா கண்கள் நேர்த்தி.

தான் நாயகனாக நடிக்கவேண்டும் என்பதற்காகவும் தன் மனைவியை நாயகியாக்க வேண்டுமென்பதற்காகவுமே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து படமெடுத்திருக்கிறார். ஆனாலும் வித்தியாசமான கதைக்களமும் எதிர்பாராத முடிவும் அவரை கரை சேர்த்து விடுகிறது.

Comments (0)
Add Comment