பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் தெரபிகளை செய்து வரும் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்) கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியின் ஆசிரியர்.
தன் அடையாளத்தை மறைத்து வாழும் அவர், தனக்குத்தானே வைத்துக்கொண்ட பெயர் பானு. இந்த சூழலில் அரவிந்த்தின் தந்தை மகன் திருமணத்திற்காக பெண் பார்க்கத் தொடங்குகிறார். இந்த சிக்கலில் இருந்து மீண்டு வர, வேறு வழியின்றி தன்னுடைய அடையாளத்தை வெளிப்படையாகச் சொல்கிறார், பானு.
இதை அவரின் குடும்பமும், பள்ளி நிர்வாகமும், சமூகமும் எப்படி எடுத்துக் கொண்டது? அரவிந்த் பானுவாக மாறும் பயணம் எப்படியானது என்பதைப் பேசுவதே இந்த ‘நீல நிறச் சூரியன்’.
இயக்குனர் வாழ்வில் நடந்த சம்பவமே கதைக்களம் என்பதால் படம் மீதான ஒட்டுதல் தொடக்கத்திலேயே ஏற்பட்டு விடுகிறது.
படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் சம்யுக்தா விஜயன். தன்னை பிறர் புரிந்து கொள்ளாத நிலையில் குமைந்து நிற்பது, பெண் உணர்வில் மூழ்கிய அவர் தனக்கானவராக ஒருவரை நெருங்க, அவரோ இவரை உடல் ரீதியாக மட்டும் அணுக நினைக்க.. இவர் கலங்கி நிற்கும் ஒரு இடம் போதும்.
திருநங்கை மாற்றம் என்பது இயற்கையான நிகழ்வே என்பதை எடுத்துச்சொன்ன விதமும் சிறப்பு. இதற்கான காட்சிகள் கூடுதல் சிறப்பு. இம்மாதிரியான கதைக்களத்தில் ஆபாச காட்சிகள் கொஞ்சமும் இல்லாதது மேலும் சிறப்பு.
நீலம் என்பது நிறமல்ல, உணர்வுக் களஞ்சியம்.