காவல்துறை அதிகாரிக்கும் உள்ளூர் பெரியவருக்கும் நடக்கும் ‘நீயா நானா’ போட்டியில், நன்றி விசுவாசத்துக்காக மாட்டிக் கொள்ளும் நாயகன் கதை. அதை மதுரை மண்ணின் மணத்தோடு கொஞ்சமும் குறையாத வீர தீரத்தோடு சொல்லி இருக்கிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பெரியவர் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து கதை தொடங்குகிறது. அந்த பெரியவர் வீட்டில் வேலை பார்த்த தன் கணவரை காணோம் என்று ஒரு இளம் பெண் தன் சின்னப் பெண்ணுடன் பெரியவர் வீடு தேடி வந்து தகராறு செய்ய…
பெரியவரின் மூத்த மகன் அந்தப் பெண்ணை அடித்து துரத்துகிறான்.
இதற்கிடையே பெரியவர் வீட்டுக்கு தன்னை தேடிப்போன மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என்று அவள் கணவன் போலீசில் புகார் தர…
ஏற்கனவே பெரியவர் குடும்பத்தின் மீது தீரா பகையிலிருந்த அந்த ஏரியா எஸ்.பி. அருணகிரி, இந்த சந்தர்ப்பத்தை தனதாக்கிக் கொள்ள திட்டமிடுகிறார்.
இதன் பிறகு பெரியவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெண்ணின் பிணம் கிடைக்க, அதைத்தொடர்ந்து பெரியவரையும் அவர் மகனையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ள சைலண்டாக ஏற்பாடு செய்கிறார்.
இந்த தகவல் பெரிய வருக்கு தெரிய வர….
மகன் ஒரு காரிலும் பெரியவர் இன்னொரு காரிலுமாக தப்பிச் செல்கிறார்கள்.
இப்போது பெரியவர் நேராக வெளியூரில் மளிகை கடை நடத்தி வரும் காளியின் இல்லம் போகிறார்
ஐந்து வருடங்களுக்கு முன்பு அடிதடிக்கு அஞ்சாத காளி இதே பெரியவருக்காக ஒரு கொலையும்
செய்தவன். அதன் பிறகு இப்போது மனைவி, இரு குழந்தைகள் என்று புதிய மனிதனாக வீட்டோடு சின்னதாய் ஒரு மளிகை கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறான்.
இப்போது மீண்டும் தேடி வந்த பெரியவர் தன் குடும்பத்தை அழிக்கத் துடிக்கும் போலீஸ் எஸ்பி. அருணகிரியை. கொல்லச் சொல்ல..
முதலில் மறுக்கும் காளி , பெரியவர் காலில் விழுந்து கதறியபோது வேறு வழியின்றி சம்மதிக்கிறான் .
பெரியவர் குடும்பத்துக்கும் போலீஸ் எஸ்.பி. அருணகிரிக்கும் இடையே இருக்கும் பகைக்குள் சிக்கிக்கொண்ட காளி, இந்த பிரச்சனையை எப்படி கையாள்கிறான்? பெரியவரின் விருப்பப்படி போலீஸ் எஸ்.பி.யை போட்டுத் தள்ளினானா? அல்லது அப்படி செய்யாமல் பெரியவரின் குடும்பத்தின் பகைக்கு ஆளானானா? என்பதை திக் திக் திருப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.
அடி தடியை எல்லாம் ஓரம் கட்டி வைத்து விட்டு மனைவி, பிள்ளைகள் என்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காளியாக விக்ரம் அந்த கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். குடும்பத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லும் போது அந்த ஆழமான மனோதிடத்தை நடிப்பால் நமக்குள்ளும் கடத்தி விடுகிறார்.
உள்ளாடையுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்து எஸ் பி.யின் கண் முன்னே தன்னை மிரட்டியவரை துப்பாக்கியால் சுட்டு மேலோகம் அனுப்புவது, ‘டேய்..’ சொன்ன இன்ஸ்பெக்டரை அந்தக் கணமே தோட்டாவுக்கு இரையாக்குவது என்று படம் முழுக்க விக்ரமின் அதிரடி ஆட்டம் திரையை பரபரப்பாக வைத்திருக்கிறது.
மனைவியின் வார்த்தைக்கு கட்டுப்படுவது, பெரியவர் மீதான விசுவாசத்தை மீற முடியாமல் தவிப்பது என்ற இந்த இரு வேறு நிலைகளிலும் நடிப்பில் இதுவரை பார்த்திராத இன்னொரு விக்ரம், தமிழ் சினிமாவின் வரம்.
விக்ரமின் மனைவி கலைவாணியாக துஷாரா விஜயன் அந்த கேரக்டரில் முழுமையாக வெளிப்படுகிறார். கணவன் தன் சொல்லை மீறி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு போய் விட்டானோ என்ற தவிப்பையும் பதட்டத்தையும் அவர் வெளிப்படுத்துவது தேர்ந்த நடிப்பின் உச்சம்.
கிளைமாக்ஸ்சில் குடும்பத்தை காப்பாற்ற அவர் எடுக்கும் ருத்ர தாண்டவம் நடிப்பின் வேறொரு எல்லை.
எஸ் பி.அருணகிரியாக எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் இருந்து விடுபட்டு நடிப்பில் புதிய முகம் காட்டி இருக்கிறார். பெரியவர் குடும்பத்தின் மீதான பகையை மனதில் அடைகாக்கும் அந்த வன்மத்தை திரையில் அவர் காட்டுவது தனித் துவ நடிப்பு..
மகனை காப்பாற்றுவதற்காக போராடும் மாருதி பிருத்விராஜ், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு அவர்கள் வீட்டு குடும்ப பெண்கள் என அனைவரும் தங்கள் நடிப்பால் காட்சிகளுக்கு மெருகேற்றுகிறார்கள். நாயகனின் தாயாக ஸ்ரீஜா சாந்தம் பிளஸ் பாந்தம்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் சுகராகம். ஓகே ரகம். பின்னணி இசை திகில் ரகம்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா கதையின் வீரியத்தை காட்சி வழியே நமக்குள் பதற்றமாய் கடத்தி விடுகிறது.
சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபு அமர்க்களப்படுத்தி விடுகிறார். எஸ். யு.அருண்குமார் இயக்கி இருக்கிறார். ஆக்ஷன் படம் என்றாலும், அதற்குள் பாசப்பிணைப்பையும் கொட்டி, விறுவிறுப்பு குறையாமல் தந்த விதத்தில் தேர்ந்த கமர்ஷியல் இயக்குனராக இடம் பிடிக்கிறார்.
ஒரு இரவில் நடக்கும் உயிர் அபாய போராட்டங்களை பதற்றமும் பரபரப்புமாய் தந்து ஆக்ஷன் பிரியர்களின் அதிரடி அரவணைப்புக்குள் வந்து விட்டார்.
இந்த வீரன் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரியவன்..