யாதும் அறியான் -திரை விமர்சனம்

மனநல மருத்துவர் தம்பி ராமையாவை நாயகன் தினேஷ் சந்திப்பதில் இருந்து கதையை தொடங்குகிறார்கள்.

தினேஷ் கூச்ச சுபாவம் கொண்டவர். அவருக்கும் பிரானா என்று ஒரு காதலி அபூர்வமாக அமைகிறாள். மற்ற ஜோடிகள் போல் தன் காதலியுடன் நெருக்கம் காட்ட விரும்புகிறார் தினேஷ்.ஆனால் பிரானாவோ காதலனை தொடக்கூட அனுமதிப்பதில்லை.

திருமணத்திற்குப் பிறகு தான் எல்லாமும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இதை தினேஷ் தனது நெருங்கிய நண்பனிடம் வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். அந்த நண்பன் கொடுத்த ஐடியாவின் பேரில் காதலியை சுற்றுலாவுக்கு அழைக்கிறார் தினேஷ் .நண்பனும் அவனது காதலியோடு வருவதாக ஏற்பாடு.

இரு ஜோடிகளும் மலைப்பிரதேசத்தில் அமைதியான ஒரு விடுதிக்கு போய் அங்கே தங்குகிறார்கள்.
.எப்படியாவது காதலியை அந்த ராத்திரிக்குள் வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்கிற திட்டத்தோடு விடுதி அறையில் பிரானாவை நெருங்கும்போது காதலி அதற்கு சம்மதிக்க மறுக்க… கெஞ்சி கூத்தாடி கடைசியில் காதலியின் சம்மதம் கிடைத்து எல்லாம் முடிகிறது. ஆனால் தினேஷின் சந்தோஷம் நீடிக்க வில்லை. இந்த நிகழ்வில் பிரானாவின் பிராணன் போய்விட, அதிர்ந்து போகிறார் தினேஷ்.

பக்கத்து அறையில் இருந்த தனது நண்பனையும் அவன் காதலியையும் அழைத்து பிணமான நிலையில் கிடக்கும் காதலியை காட்ட…

நண்பனா போலீசுக்கு போகலாம் என்க, தினேஷ் அதை மறுக்க இப்போது இவர்கள் அடித்துக் கொள்கிறார்கள். இதில் நண்பனோடு அவன் காதலியும் கொல்லப்படுகிறாள்.

ஆக, விடிவதற்குள் மூன்று கொலை. பிண ங்களுக்கு நடுவே நாயகன்.

இப்போது நாயகனின் அடுத்த கட்ட நிலை என்ன? என்பது கிளைமாக்ஸ்

அறிமுக நாயகன் தினேஷுக்கு முதல் படம். முதல் பாதியில் பாதி முகம் மறைக்க கண்ணாடியில் அப்படியோர் அப்பாவித் தோற்றத்தில் வருகிறார் .ஆனால் அவரே படத்தின் பிற்பாதியில் அடப்பாவி ஆகிவிடுகிறார். மூன்று பிணங்கள் விழுந்த நிலையில் அடுத்து அவர் செய்யும் செயல்கள் அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

குறிப்பாக நடந்ததை தெரிந்து கொண்டு விட்ட விடுதி காவலாளி அப்பு க்குட்டியை அறைக்கு அழைத்து மிரட்டலாய் கிளீன் பண்ண சொல்கிற இடம் நிஜமாகவே திக் திக் ரகம். நாயகனின் நடிப்பு முழுமையாக வெளிப்படுவது இந்த இடத்தில் தான்.

நாயகியாக பிரானா , நாயகனின் நண்பராக ஆனந்த் பாண்டி, அவரது காதலியாக ஷ்யாமள், விடுதிப் பணியாளராக அப்புக்குட்டி என அனைவரும் தங்கள் வேலையை சரியாகவே செய்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் எல்.டி.யின் கேமரா வனப்பகுதியில் அமைதியான சூழலில் இருக்கும் விடுதியை அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறது.
இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் இசையில் பாடலும், பின்னணி இசையும் இந்த சஸ்பென்ஸ் கதையின் பக்க பலம் .

எளிமையான ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு, வித்தியாசமான சைக்கோ திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்.கோபி.
2024 ம் வருடம் நடக்கும் கதையை, 2026 -ம் ஆண்டில் பயணிப்பது போன்று கால மாற்றம் செய்து திரைக்கதை அமைத்திருப்பது குழப்பம். 2024 பிற்பாதியில் தொடங்கும் கதை, 2026 ஆம் ஆண்டுக்கு வரும்போது அடுத்த முதல்வர் யார் என்ற தனது ஆசையையும் சொல்லி விடுகிறார்.( ஒருவேளை தயாரிப்பாளரின் ஆசையும் இதுதானோ என்னவோ…)
மொத்தத்தில், ‘யாதும் அறியான்’ யார் இவன் ? என்று நடிப்பில் கேட்க வைக்கிறான்.

Comments (0)
Add Comment