யோலோ –திரை விமர்சனம்

படவா கோபியின் மகளான தேவிகாவைப் பெண் பார்க்க ஒரு குடும்பம் வருகிறார்கள் தேவிகாவும் வந்தவர்களுக்கு காபி கொடுக்க, வந்தவர்களோ, ஏற்கனவே திருமணம் ஆன இந்த பெண்ணுக்கு மறுபடியும் எதற்காக வரன் பார்க்கிறீர்கள் என்று கேட்க…

தேவிகாவின் குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. குறிப்பிட்ட தேதியில் வெளிநாட்டில் தேவிகா தனது கணவன் தேவோடு தேனிலவுக்கு வந்த போது பார்த்ததாக கூறி பெண் பார்க்க வந்தவர்கள் மேலும் அதிர்ச்சி தருகிறார்கள். அதன்படியே பாஸ்போர்ட் ஆதாரமும் இருக்க, இப்போது மணப்பெண் தேவிகாவும் அதிர்ச்சி அடைகிறார்.

இது எப்படி நடக்கும்? ஆனால் நடந்திருக்கிறதே… அதற்கான ஆதாரம் இருக்கிறதே… தவிக்கிறார் தேவிகா.

மகள் தேவிகா மீது அவரின் தந்தை படவா கோபிக்கு நம்பிக்கை அதிகம். அதனால் அவர் இது விஷயத்தில் மகளை முழுசாக நம்புகிறார்.

இதற்கிடையே பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையோ, முறையாக விவாகரத்து செய்து கொண்டால் உங்கள் மகளை மணக்க நான் ரெடி என்கிறார்.

தேவிகாவுக்கும் தேவுக்கும் பதிவுத் திருமணம் நடந்ததற்கான ஆதாரமும் இருப்பது தெரிய வருகிறது.
இது எப்படி சாத்தியம்? என்று தேவிகா உண்மையை அறிய முயற்சி செய்கிறார். அதற்கு அவர் திருமணம் ஆனதாக சொல்லப்படும் தேவின் உதவியை நாடுகிறார். இந்த சந்திப்பில் இருவருக்குள்ளும் காதல் அரும்புகிறது. சிற்சில தடுமாற்றங்களில் அந்தக் காதல் வேர் பிடிப்பதற்குள் ஏற்கனவே நடந்து முடிந்ததாக சொல்லப்பட்ட திருமணம் விவாகரத்தாகிறது. இதற்கிடையே தேவிகாவை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்கும் தேவிகாவுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது.
இந்தத் திருமணம் நடந்ததா? உண்மையில் தேவிகாவின் முதல் திருமணம் விஷயத்தில் நடந்தது என்ன என்பது கொஞ்சமும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

நாயகன் தேவ், நாயகி தேவிகா இருவரும் கதைக்கேற்ற பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
படத்தில் வேகத்தடை போல் விஜே நிக்கியின் கதாபாத்திரம் அமைந்துள்ளது . இரண்டாவது திருமணத்திற்கு அவர் காட்டுகிற அவசரம் கடுப்ஸ் ரகம். நாயகி அப்பாவாக படவா கோபி அனுபவ நடிப்பில் காட்சிகளை சிறப்பிக்கிறார்.

படம் அமானுஷ்யம் சார்ந்ததா? கிரைம் திரில்லர் சார்ந்ததா? என்று ஒரு கட்டத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியவில்லை. அமானுஷ்யம் தொடர்பான காட்சிகளை இன்னும் கூட தெளிவாக சொல்லி இருக்கலாம்.

யோலோ பிராங்க் சேனலுக்காக எதிர்ப்படுபவர்களை அதிர்ச்சியடைய வைப்பதற்காக அவர்கள் செய்யும் அலப்பறைகள், ஸாரி கொஞ்சம் ஓவர்.

சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும், -சகீஷனா சேவியரின் இசையும் படத்தின் இன்னபிற பலமாக இருக்க…

இயக்கி இருக்கிறார் சாம். சஸ்பென்சுக்கு மேல் சஸ்பென்ஸ் ஆக காட்சிகளை நகர்த்தியவர், உண்மை காதல் சாகாது என்பதையும் மணியடித்து சொல்லி இருக்கிறார்.

Comments (0)
Add Comment