படையாண்ட மாவீரா — திரை விமர்சனம்

பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கையை வான் உயர்ந்த வரலாறாக திரை மொழியில் தந்திருக்கிறார்கள்.

ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வது தான் வரலாறு. அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி சரிவர அறிந்திராத மக்கள் கொண்டிருந்த எண்ணங்களை அடியோடு தகர்ப்பதென்பது அரிய நிகழ்வு. அந்த நிகழ்வை நிகழ்த்திக் காட்டியிருக்கும் படம் இது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காடுவெட்டி குரு. .தான் பிறந்த சமூகத்துக்காக மட்டுமின்றி அடித்தட்டு மக்களின் உரிமைக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் சிமெண்ட் ஆலையை கொண்டு வருவதற்காக அந்தப் பகுதி மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களை அடித்து துரத்த, அதற்கு நியாயம் கேட்கிறார். அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களுக்கு அவ்வப்போது செக் வைக்கிறார். அரசு உத்தரவுப்படி உங்கள் ஊரில் சாராயக்கடையை திறந்தே தீருவேன் என்று அதிகாரத் தொனியில் பேசும் மாவட்ட ஆட்சியரை அறைக்குள் பூட்டி வைத்து அதிர்ச்சி கொடுக்கிறார். இம்மாதிரியான சில சம்பவங்கள் சட்டத்தின் பார்வையில் அவரை குற்றவாளியாக கருத இடமளிக்க.

அவரை கைது செய்ய தருணம் பார்க்கிறது அதிகார வர்க்கம். தன் சொல்லால் செயலால் மக்கள் நல்வாழ்வே தன் லட்சியம் என செயல்படும் அவரை காவல்துறை நெருங்க முடிந்ததா என்பது உணர்வும் நெகிழ்வுமான திரைக்கதை.

காடுவெட்டிகுரு வேடத்தை ஏற்று நடித்திருக்கும் வ.கெளதமன், அந்த வேடத்தில் சிறப்புற உயர்ந்து நிற்கிறார். சில இடங்களில் உணர்ச்சிப் பிழம்பாக வெடிக்கிறார்.
தன் மக்களிடம் அவர் காட்டும் அப்பழுக்கற்ற நேசம் பனியிலும் மென்மை, சண்டைக் காட்சிகளில் அதிரடி, காதல் காட்சிகளில் கனிவு என்ன பல்வேறு நிலைகளிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார் கௌதமன்.

நாயகியாக, குருவின் மனைவியாக வரும் பூஜிதா பொன்னாடாவுக்கு குறைந்த காட்சிகளே என்றாலும் நடிப்பில் நிறைந்து தெரிகிறார்.
சிறுவயது குருவாக நடித்திருக்கும் கெளதமனின் மகன் தமிழ் கெளதமனும் அப்பாவுக்குத் தப்பாத பிள்ளையாக அந்த அதிரடி கேரக்டரில் தன் இருப்பை நிரூபிக்கிறார்.

கதாநாயகனின் தந்தையாக சமுத்திரக்கனி, பாசமிகு கணவராக, பரிவுமிகு தந்தையாக அந்த வேடத்தில் நிரம்பி நிற்கிறார். அவரது மனைவியாக சரண்யா பொன்வண்ணன் பழி
உணர்வை துல்லியமாக வெளிப்படுத்துகிறார் .
ஆடுகளம் நரேன், மது சூதன ராவ், பாகுபலி பிரபாகர்
வில்லத்தன நடிப்பில் தடம் பதிக்கிறார்கள். இளவரசு நியாயமான போலீசாக வர, நாயகனுக்கு பக்கத்துணையாக மன்சூரலிகான் அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்கிறார்.
ஒரே காட்சி என்றாலும் வீர பத்திரனாக கெத்து காட்டிப் போகிறார் கராத்தே ராஜா. நாயகனின் விசுவாச நண்பனாக வரும் ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைக்கிற அளவுக்கு நெகிழவும் வைக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அத்தனையும் ரசிக்க வைக்க, பாடல் வரிகள் கவிப்பேரரசு வைரமுத்துவின் கை வண்ணத்தில் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்குமான கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் பாட்டு உருகாத நெஞ்சத்தையும் உருக்கி விடும். பின்னணி இசையில்
சாம்.சி.எஸ். ஓ. எஸ்.
கோபி ஜெகதீசுவரன் ஒளிப்பதிவு கதை நடந்த காலத்தை கண்களுக்குள் நிறுத்தி விடுகிறது
சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டிய இன்னொருவர் உணர்ச்சிமிகு
வசனம் தீட்டிய பால்முரளி வர்மன்.
நாயகனாக நடித்திருக்கும் வ.கெளதமன் எழுதி இயக்கியிருக்கிறார். மக்கள் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நெருக்கமாக சொன்ன விதத்தில் நாயகனாகவும் இயக்குனராகவும் ஜெயித்திருக்கிறார்.
மனசை ஆண்ட மாவீரன்.

Comments (0)
Add Comment