அந்த 7 நாட்கள் –திரை விமர்சனம்

இன்னும் ஏழு நாட்களில் உயிருக்கு உயிரான தன் காதலி மரணம் அடைந்து விடுவாள் என்பது காதலனுக்கு முன்பே தெரிய வந்தால்…

சூரியகிரகண ஆராய்ச்சியில் ஈடுபடும் கல்லூரி மாணவருக்கு ஒரு விசேஷ சக்தி கிடைக்கிறது.
அவர் ஒருவரை உற்றுப் பார்த்த மாத்திரத்தில் அவரது மரண நாள் எது என்பது தெரியவருகிறது
அது அப்படியே பலிக்கவும் செய்கிறது.
இந்நிலையில் அவரது காதலியை உற்று நோக்கிய போது இன்னும் 7நாட்களில் அவள் மரணமடைவாள் என்பது தெரியவர…
காதலியைக் காப்பாற்றப் போராடுகிறார். அவருக்குள் இருந்த அந்த அதிசய சக்தி அதுவரை பலித்து வந்த நிலையில், உயிருக்கு உயிரான தன் காதலியும் மரணத்தை தழுவி விடுவாளோ என்ற பதட்டம் நாயகனை ஆக்கிரமிக்க, காதலியை காப்பாற்ற அந்த ஏழு நாட்களும் போராடுகிறார். காதலியை காப்பாற்ற முடிந்ததா என்பது உணர்வும் நெகிழ்வுமான கிளைமாக்ஸ்.

அஜிதேஜ் நாயகனாக இந்தப் படம் மூலம் நடிப்பில் அடி எடுத்து வைத்திருக்கிறார். காதலியை முதன்முதலாக சந்திக்கும் இடம் தொடங்கி அதே காதலியின் உயிரை காப்பாற்ற போராடும் கிளைமாக்ஸ் வரை எந்த இடத்திலும் மிகை நடிப்பில்லை. இயல்பாக நடித்து ஆச்சரியப்படுத்துகிறார். காதலியைக் காப்பாற்ற மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும், கிளைமாக்ஸ் வரைக்கும் கூட இயல்பான நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார் .

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதாவுக்கும் இது அறிமுக படம் தான். ஆனால் அந்த சுவடே இல்லாமல் இவரும் இயல்பான நடிப்பில் பிரமிக்க வைக்கிறார் குறிப்பாக கிளைமாக்சில் நோயின் தீவிரத்தில் எந்த நேரமும் மரணம் நிச்சயம் என்ற நிலையில் இவரது நடிப்பும் உடல் மொழியும் அடடா ரகம். அம்மணிக்கு விருது காத்திருக்கு.
அமைச்சராக கே.பாக்யராஜ், நாயகனின் அப்பாவாக நமோ நாராயணன், வழக்கறிஞராக சுபாஷினி கண்ணன், கௌரவத் தோற்றத்தில் தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன் இந்த கதை மரத்தின் பக்கவாட்டுக் கிளைகள்.

சச்சின் சுந்தரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் வேறு லெவல்.

கோபிநாத் துரையின் ஒளிப்பதிவு ரம்மியம். எழுதி இயக்கியிருக்கிறார் எம்.சுந்தர். நாட்டில் இன்று அதிகமாகப் பேசப்படும் தெருநாய்க்கடி சிக்கல், வெறிநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் பற்றி ஒரு பய பாடமே நடத்திஇருக்கிறார். கிளைமாக்ஸ் சீன் ஒவ்வொரு ரசிகனையும் இருக்கை நுனிக்கே கொண்டு வந்து விடுகிற வித்தையை செய்திருக்கிறது.

Comments (0)
Add Comment