ஃப்ரைடே — திரை விமர்சனம்

வழக்கமான கூலிப்படை கதை. அதை திரில் குறையாமல் தந்திருக்கிறார்கள்.
மைம் கோபி கூலிப்படை வைத்துக்கொண்டு எதிரிகள் கண்களில் விரல் விட்டு ஆட்டு பவர். தனக்குப் பணியாதவர்கள் எதிரிகள் என யாராயிருந்தாலும் தனது ஆட்களை அனுப்பி காலி பண்ணி விடுவார். பணம் வாங்கிக் கொண்டு சர்வ சாதாரணமாக கொலைகளையும் செய்பவர்.
அதே நேரம் அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருக்கிறார். வரும் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பது அவரது கனவு.
ஆனால் அந்தக் கனவு நிறைவேறுவது போல் தெரியவில்லை. அவர் கட்சி எம்எல்ஏ வேட்பாளராக இன்னொருவரை தேர்ந்தெடுத்து விடுகிறது. இதனால் தனது வாய்ப்பை தட்டிப் பறித்த அந்த வேட்பாளரை தனது அடியாட்கள் மூலம் காலி பண்ணுகிறார். இதன் பிறகு கட்சி அவரையே வேட்பாளராக அறிவிக்கிறது. இனி அரசியலில் தனக்கு பிரகாச எதிர்காலம் என்று நம்பி மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். அவர் கனவு நனவானதா?
மைம் கோபியின் நம்பிக்கைக்குரிய அடியாள் தான் கதையின் நாயகன்.
நேர்மையான போலீசாக இருந்த தன் தந்தையை கொன்றவனை சிறுவயதிலேயே போட்டுத் தள்ளி, அதற்குப் பிறகு எடுத்த கத்தியை கீழே போட முடியாமல் மைம் கோபியிடம் அடியாளாக வந்து சேர்கிறார்.
தனது வாழ்க்கை தான் வெட்டுகுத்து என்று திசை மாறிவிட்டது. தன் ஒரே தம்பியாவது நல்ல வேலை மனைவி குடும்பம் என்று நிம்மதி வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் தான் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பிக்கும் அண்ணனைப் போல் அடிதடி தொழிலில் சாதிக்க வேண்டும் என ஆசை வருகிறது. அதனால் அண்ணனுக்கே தெரியாமல் மைம் கோபியின் அடியாள் கூட்டத்தில் தம்பியும் ஒருவனாகிறான்.
இந்நிலையில்தான் மைம் கோபியின் அரசியல் எதிரியை கொல்லப்போகும் பட்டியலில் நாயகனின் தம்பியும் இடம் பிடிக்கிறான் . அந்த மோதலில் அரசியல் புள்ளியோடு சேர்ந்து இவனும்
பலியாகிறான்.
தம்பியின் இழப்புக்கு அண்ணன் எடுத்த முடிவு என்ன? மைம் கோபி அண்ட் கோ வின் தாதா சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்ததா என்பதை திகிலும் திரில்லருமாய் தந்திருப்பதே எந்த ஃப்ரைடே.
தாதா கேரக்டரில் வந்த போதிலும் அலட்டாத நடிப்பில் கவர்கிறார் மைம் கோபி.
அவரது முக்கிய அடியாளாக அனீஸ் மாசிலாமணி தோற்றப் பொலி விலேயே தனது பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து விடுகிறார். அடியாள் கூட்டத்தில் இருந்த போதிலும் தம்பி மீது அவர் காட்டும் பாசம் தனித்துவம் வாய்ந்தது. அரிவாள் கத்தி என உயிர் பறிக்கும்
உலோகங்களுடன் தன் வாழ்க்கை அமைந்த நிலையிலும், அந்த பாசமிகு அண்ணன் கேரக்டரில் தான் அவரது நடிப்பில் ஜொலிப்பு அதிகம்.
அதனாலேயே அறிமுக நாயகன் போல் இல்லாமல்
யதார்த்த நடிப்பில் மனதில் பதிகிறார். அவரது தம்பியாக வருபவரும் நடிப்பில் தேறுகிறார்.
படத்தின் திருப்புமுனை கேரக்டரில் வரும் தீனா,
தாயைக் கொன்றவனை பழிவாங்கத் துடிக்கும் கேரக்டரில் கன கச்சித நடிப்பை வழங்கி இருக்கிறார்.
அரசியல்வாதியை கொல்ல ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கும் இடத்தில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் கேரக்டரில் ராமச்சந்திரன் (ராம்ஸ்) நிஜமாகவே பயமுறுத்தி விடுகிறார்.
எழுதி இயக்கி இருக்கிறார் ஹரி வெங்கடேஷ். நிறைய ரத்தம் கொஞ்சம் ரத்தப் பாசம் என்று படம் போனாலும் கொஞ்சமும் வேகம் குறையாத கதைக்களம் இந்த ப்ரைடேவை ரசிக்க வைத்து விடுகிறது. ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ், இசையமைப்பாளர் டுமே இருவரும் இயக்குனரின் கூடுதல் பக்க பலம்.

Comments (0)
Add Comment