கட்டிடப் பொறியாளரான சாக்ஷி அகர்வால், பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் விஜய் விஸ்வாவை காதலிக்கிறார். பெற்றோர் சம்மதத்தின் பேரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் சாக்ஷி அகர்வாலை கட்டுமான நிறுவனத்தின் காவலாளி ரோபோ சங்கர் கொலை செய்ய திட்டமிடுகிறார்.
ஆனால், அவருக்கு முன்னதாக, கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் செல்லக்குட்டி, விஜய் விஸ்வா, சாக்ஷி அகர்வால், அவரது தம்பி என மூவரையும் கடத்தி விடுகிறார்.
இத்தனைக்கும் சாக்ஷி அகர்வாலும் செல்லக்குட்டியும் சிறு வயது நண்பர்கள். இப்படி இருக்க அவர் அப்படி செய்தது ஏன்? என்ற கேள்விக்கான விடையை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்வதே இந்த ‘சாரா’.
கதையின் நாயகியாக சாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், அந்த கேரக்டரில் முழுமையாக நிரம்பி நிற்கிறார். தன் சிறு வயது நண்பனை தான் பொறியாளராக இருக்கும் அதே நிறுவனத்தில் தொழிலாளியாக பார்த்த நிலையிலும் அவர் காட்டும் அன்பு நிஜமான நட்பின் இலக்கணம். அதே நண்பன் சைக்கோவாக மாறி தன்னை, தன் காதலனை, தன் தம்பியை கடத்திய காரணம் அறிந்து அதிருமிடத்தில் ‘நீயா நண்பன்’ என்று கேட்காமல் கேட்கும் அந்த கண்கள் ஆயிரம் நடிப்பை கொட்டி விடுகிறது.
சாக்ஷி அகர்வாலின் காதலராக நடித்திருக்கும் விஜய் விஸ்வா, ஹீரோவாக வருகிறார். இவரது கேரக்டரை இன்னும் கூட விரிவு படுத்தி இருக்கலாம்.
ஆடை, தோற்றம் என தன்னை கோமாளி தோற்றத்தில் காட்டிக்கொண்டு அறிமுகமாகும் இயக்குநர் செல்லக் குட்டி, தமிழ் சினிமாவில் நடிப்புக்கு நல்வரவு. அடுத்தடுத்த காட்சிகளில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் திரையரங்கை அதிர வைக்கிறது. படத்தின் ஹீரோயின், ஹீரோ, வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களையும் ஓரம் கட்டிவிட்டு, அவர் நடத்தியிருக்கும் நடிப்பு ராஜாங்கம் வேறு லெவல்.
யோகி பாபு வரும் காட்சிகள் சிரிக்க வைத்தாலும், நண்பனுக்கு விஷம் வாங்கி வைத்ததாக சொல்லுமிடம் மட்டும் கடுப்படிக்கிறது. ரோபோ சங்கர், தங்கதுரை பேசும் வசனங்களுக்கும் இதே நிலை தான்.
செல்லக்குட்டியின் அம்மாவாக வரும் அம்பிகா, வில்லனாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா ஆகியோர் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கலாம் ரகம்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மன் குமாரின் கேமரா கதைக்கு ஏற்ப சுற்றி சுழன்று இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் செல்லக்குட்டி, நட்பு மற்றும் காதலோடு பின்னிப் பிணைந்த ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கொடுத்திருக்கிறார். செல்லக்குட்டி – சாக்ஷி தொடர்பான அந்த பள்ளிப்பருவ பிளாஷ்பேக் படத்தின் ஜீவனான காட்சி.
இந்த சாரா, செல்லக் குட்டி என்ற மதிப்பு மிக்க நடிகனை திரைக்கு தந்து இருக்கிறது.