மாண்புமிகு பறை — திரை விமர்சனம்

பறை இசைக்கலைஞர்களான லியோ சிவகுமாரும், ஆரியனும் உயிர் நண்பர்கள். இருவரும் ஆதிபறை என்ற பெயரில் பறை இசைக் குழு ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு இந்தக் கலையில் ஆர்வமுள்ள இளைய சமுதாயத்துக்கு பயிற்சியும் அளிக்கிறார்கள்.

இந்நிலையில்பறை இசைக் கலைஞர்களை இழிவாகப் பார்க்கும் சாதி துவேஷமிக்க சிலரால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் சாதுர் யமாக சமாளித்து தொழிலில் வெற்றிக்கொடி நாடுகிறார்கள். இது பொறுக்காத எதிர் கோஷ்டி ஸ்கெட்ச் போட்டு அவர்களை காலி பண்ண முடிவு செய்கிறது. அதில் இருந்து மீண்டு அவர்கள் நினைத்ததை சாதித்தார்களா ? இல்லையா ?, என்பதை சொல்வதே
‘மாண்புமிகு பறை’.
நாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் வெற்றி என்ற கேரக்டரில் வருகிறார். பேதம் பார்க்கும் மேல் தட்டு மக்களிடமிருந்து வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமல் அந்த கேரக்டரில் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கோவில் திருவிழாவுக்கு சென்ற தனது நண்பனின் உயிருக்கு ஆபத்து என தெரிய வந்ததும் அவரது துடிப்பும் தவிப்பும் நடிப்பில் தேர்ந்த நடிகராக அவரை முன்னிறுத்துகிறது.
லியோ சிவகுமாரின் நண்பராக வரும் ஆரியன், ஹீரோவுக்கு இணையான அந்த கேரக்டரில் சதம் அடிக்கிறார். காட்டுப்பகுதியில் எதிரிகளிடம் சிக்கி இவர் உயிருக்கு போராடும் இடங்களில் கண்களில் மரண பயத்தை துல்லியமாக வெளிப் படுத்துகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, லியோவுடனான காதல் காட்சிகளில் கண்கள் இரண்டால் மட்டுமே காதலை பேச வைக்கிறார். கிளைமாக்சில் இவர் வெறித்தனமாக பறையடித்து ஆடும் அந்த ஆட்டம் நிஜமாகவே சிலிர்ப்பு ரகம்.
கஜராஜ், அசோக் ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயகுமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் என நட்சத்திர பட்டியல் அதிகம் என்றாலும் அவரவர் கேரக்டர்களில் காட்சிகளில் நிரம்பி நிற்கிறார்கள்.

தேவா இசையில் பாடல்கள் ரசிக்கலாம்.
ஒளிப்பதிவாளர் ஆர்.கொளஞ்சி குமாரின் கேமரா கிராமங்களை அழகுற வலம் வந்து கண்களை நிறைக்கிறது
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.விஜய் சுகுமார், பறை இசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது ஆணவக் கொலைக்கு முக்கிய இடம் அளிப்பதா? என்ற தடுமாற்றத்தில்
இரண்டையும் குழப்பி படத்தை முடித்து இருக்கிறார். சாதிவெறி பிடித்த
கிராமங்களில் பண்டைய கலைகளை வாழவைக்கும் கலைஞர்களை அழித்துக் கொண்டே இருந்தால் அந்தக் கலைகளின் அடுத்த கட்ட நிலை என்ன என்பதை விவரிக்கும் கிளைமாக்ஸ் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது.

Comments (0)
Add Comment