ஐடியில் வேலை பார்க்கும் நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசி பழகுவதில் ஒருவித தயக்கம் இருந்து வருகிறது. எந்த பெண்ணிடமாவது பேச முயன்றால் தயக்கத்தில் நாக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும். இப்படி பயந்த சுபாவம் கொண்டதாலோ என்னவோ அவரை எட்டி வந்த காதல் கூட எட்டத்தில் போய் விடுகிறது.
இப்படி இரண்டு காதல் கைவிட்டு போனதில் விரக்தியின் எல்லைக்கே போய் விடுகிறார். பெண்களிடம் அவருக்கு இருக்கும் இப்படியான பயத்தை போக்குவதற்காக அவரது அலுவலக நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித பிடிப்பு வருகிறது. அதனால், அவருடன் நட்பை தொடர விரும்புபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். இதே ஹஸ்லி அமானை ரவுடி கும்பல் ஒன்றும் தேடி வருகிறது. இவர்களில் உல்லாச நோக்கத்துடன் நாயகியை தேடி வந்து தனது துப்பாக்கியை பறிகொடுத்த போலீஸ்காரர் ஒருவரும் அடக்கம்.
நாயகனுடனான ஒருநாள் டேட்டிங் பயணத்தின் தன்னைத் தேடும் வெறிபிடித்த இந்த கூட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை நாயகிக்கு.
யார் இந்த பெண்? டேட்டிங் சமயத்தில் நாயகன் போட்ட காதல் அப்ளிகேஷனை நாயகி ஏற்றுக் கொண்டாரா? எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொண்டாரா? என்பதை கதை போகிற போக்கில் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகனாக சின்னத்திரையில் இருந்து பிரமோஷன் ஆகி இருக்கிறார் சரவண விக்ரம். வசீகர முகமும் தெளிவான உச்சரிப்பும் பெரிய திரையிலும் அவரை நம்முடன் நெருக்கமாக்கி விடுகிறது. ‘இது தான் உங் களுக்கு பர்ஸ்ட் டைமா?’ என்று பாலியல் தொழிலாளி கேட்க, ‘ஆமாம். உங்களுக்கு?’
என்று திருப்பி கேட்கிற நேரத்தில் பாலியல் தொழிலாளியின் ரியாக்சனுக்கு அவர் காட்டும் முக பாவனை அடடா ரகம்.
ரதி என்ற பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், நடிப்பில் பேரழகி என்பதை நிரூபிக்கிறார். பல காட்சிகளில் அவரது கண்களே பேசி விடுகிறது. இவரது பாத்திரப்படைப்பு திரையில் சரி வர கையாளப்படவில்லை என்பது தான் சிறுகுறை.
காமெடித்தனம் கலந்த வில்லனாக வரதன் கதாபாத்திரத்தில் மிரட்ட முயற்சித்திருக்கிறார் ராஜேஷ் பாலச்சந்திரன்.
அவரது அடியாட்களாக வருபவர்களும் சீரியஸ் காட்சிக்குள் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார்கள்.
காட்வின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் தினேஷ் பத்ராம் மற்றும் ஷெரிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவராஜ் சுப்பிரமணியம் ஆகியோர் புதியவர்களாக இருந்தாலும், நடிப்புக்கு புதியவர்களாக தெரியவில்லை.
லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவும் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையும் இந்த டார்க் ஹியூமர் படத்துக்கு பக்கபலமாகி இருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் கே.மணி,
பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளிகள் குறித்து பேசுவதோடு, அந்த தொழில் இந்தியாவில் உருவானது எப்படி என்பது வரை விவரமாக கிளாஸ் எடுக்கிறார். ஆமா எதிர்பாராத அந்த கிளைமாக்ஸை இன்னும் கூட கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கலாம்.
–அழகு ரதி.