லவ் ஷேர் சப்ஸ்கிரைப் –திரை விமர்சனம்

தாயின்றி தந்தை அரவணைப்பில் வளரும் நாயகி சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணாவை விரும்புகிறார். இதற்காக ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரை சந்தித்து, தங்களது காதலுக்கு சம்மதம் பெறும் சிம்ரன், காசியில் தனியாக வாழும் தனது தாயை சந்தித்து, தனது காதலை சொல்லி ஆசி பெற விரும்புகிறார்.

அதன்படி, ஆதவ் கிருஷ்ணாவும், சிம்ரனும் காசிக்கு பயணம். அங்கு தன் அம்மாவை சந்தித்து காதல் பற்றி தெரிவிக்கும் சிம்ரனுக்கு அந்த சந்திப்பு காதலனை பிரிய வேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது. இப்போது மாயமான காதலியை தேடும் ஆதவ் கிருஷ்ணா இடர்ப்பாடுகளை எதிர்கொள்கிறார். இவர்களது பிரிவின் பின்னணி என்ன?, பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?, என்பது கொஞ்சமும் ஊகிக்க முடியாத கிளைமாக்ஸ்.

நாயகனாக அறிமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணா. காதல் காமெடி என்று முதல் படத்திலேயே தூள் கிளப்புகிறார். செண்டிமெண்ட் ஏரியாவிலும் நேர்த்தியான நடிப்பில் வெளிப்படுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், இன்னொரு துடிப்பான திரை
வரவு. காதலனிடம் மட்டும் இன்றி, அவரது பெற்றோரிடத்திலும் தன் காதலை விவரித்து சம்மதம் பெறுபவர், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தன் காதல் மீதும், காதலர் மீதும் வைத்திருக்கும் அன்பை நடிப்பில் கொட்டி இருக்கிறார்.

நாயகனின் பெற்றோராக படவா கோபி, வினோதினி வர…
நாயகியின் தந்தையாக வருபவர் நடிக்க கிடைத்த வாய்ப்பை நன்றாக பற்றிப் பிடித்துக் கொள்கிறார்.
ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் கேரக்டரோடு பொருந்திப் போகிறார்கள்.
என்.எஸ்.சதீஷ்குமார் ஒளிப்பதிவில் காசி இயல்பாக கண்ணுக்குள் வந்து விடுகிறது.
அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் தேனிசை. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன், காதல் கதை என்றாலும், தாய் – மகள் உறவு, குடும்ப உறவு ஆகியவற்றை பின்னணியாக கொண்டு கதை சொன்ன விதத்தில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடுகிறார்.
தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் காதலை முதல் பாதியில் சொல்லிவிட்டு, இரண்டாம் பாதியில் காதல் பிரிவு, அதனால் ஏற்படும் வலி, காதலர்களின் மனவலிமை ஆகியவற்றை காட்சி களாக்கிய விதத்தில் காதலுக்கு புதிய கவுரவம் சேர்த்து இருக்கிறார். அந்த வகையில் இந்த காதல் கதையை தாராளமாக சப்ஸ்கிரைப் செய்யலாம்.

Comments (0)
Add Comment