முஸ்தபா முஸ்தபா — திரை விமர்சனம்

நட்புக்கு அடையாளமாக இன்று வரை நிலைத்திருக்கும் பாட்டு ‘முஸ்தபா முஸ்தபா.’
அப்படியோர் நட்பு பின்னணியில் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் சதீஷுக்கு, அங்கே நிகழ்ச்சி வழங்க வந்த டாக்டர் மோனிகா சின்னகொட்லாவுடன் காதல். இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்பட, திருமண ஏற்பாடுகள் தொடங்குகின்றன. திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில், சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்து கொள்ளும் சதீஷ், ஒரு முறை பொய் சொன்னதற்கே காதலைத் துண்டித்த நாயகியின் பார்வைக்கு இது தெரிய வந்தால் திருமணமே நின்று போகும் என்று பயந்து நடுங்குகிறார்

இதனால் திருமணத்திற்கு முன்பாக தனது பழைய நண்பன் கருணாகரன் மூலம் அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இந்த வீடியோ விவகாரம் நாயகிக்கு தெரிந்து போனதா?அந்த வீடியோவை யார், எதற்காக இணையத்தில் பதிவேற்றினார்கள் ? என்பதை கலகலப்பாக சொல்வதே இந்த ‘முஸ்தபா முஸ்தபா’.

கதையின் நாயகன் என்றாலும், காமெடியை முன்னிறுத்தி தனது இருப்பை நிலை நிறுத்தி விடுகிறார் சதீஷ்.

திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனையை சரி செய்ய அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் அனைத்தும் காமெடி போர்ஷனுக்கான வழி வாசலை திறந்து வைக்கின்றன.
சதீஷின் நண்பராக நடித்திருக்கும் சுரேஷ் ரவியும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.

நாயகர்களின் நண்பராக வரும் கருணாகரன் இயல்பான நடிப்புக்கு தமிழ் சினிமா தந்த இன்னொரு அவதார புருஷன். நட்புக்கு துரோகம் செய்வதை கூட எந்த வித குற்ற உணர்வும் இன்றி செய்து நகைச்சுவையால் திரையை நிரப்புகிறார்.
சுரேஷ் ரவிக்கு ஜோடியாக வரும் மானசா செளத்ரிக்கு அதிக வேலை இல்லை.
சதீஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மோனிகா சின்னகொட்லாவுக்கும் திரையில் குறைந்தபட்ச பங்களிப்பு தான். குடிக்க மாட்டேன் என்று சொல்லி குட்டு உடைந்த நாயகனை அவர் லெப்ட் ரைட் வாங்கும் காட்சி கலகலப்புக்கு உத்தரவாதம்.

லிவிங்ஸ்டன், உமா, ஜாவா சுந்தரேசன், புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி
அவ்வப்போது அரங்கை கலகலப்பாக்கும் பணியில் ரசிக கவனம் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீயின் கேமராவும் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் இந்த காமெடி படத்தை தாங்கி நிற்கும் பிரதான தூண்கள்.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன் சரவணன், பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் நாயகன், தனது நண்பர்களின் உதவியோடு அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தை கலகலப்பாக சொல்ல முயன்றதில் பாரதிக் கிணறு தாண்டி இருக்கிறார்.

சதீஷ், சுரேஷ் ரவி, கருணாகரன் ஆகியோரது
யதார்த்தமான நகைச்சுவை காட்சிகள் முதல் பாதி பாடத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்ல..
பிற்பகுதி விறுவிறுப்புக்கு அந்த வீடியோ சஸ்பென்ஸ் பொறுப்பேற்றுக் கொள்கிறது. இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்திருக்கிறார் இயக்குனர்.
கடைசியோ கடைசியாக அந்த வீடியோவில் நடித்தது யார் என்ற சஸ்பென்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.

ரேட்டிங்: 5/10.

Comments (0)
Add Comment