ஹேப்பி ராஜ் — திரை விமர்சனம்

ஜி.வி.பிரகாஷின் அப்பா ஜார்ஜ் மரியானின் உருவ அமைப்பை ஊரே கேலி செய்து அற்ப சுகம் காண்கிறது. ஸ்கூல் வாத்தியாராக கண்டிப்பு காட்டும் அவரை குதிரை முட்டை என கிண்டல் அடிக்கிறது.
சின்ன வயதில் இருந்தே குதிரைமுட்டை வாத்தியாரின் மகன்
என்றே ஜி.வி.பிரகாசும் அறியப்படுகிறார். உடன் படிக்கும் மாணவ மாணவிகளால் கிண்டல் கேலிகளுடன் புறக்கணிக்கப்படுகிறார்.
வளர்ந்து வாலிபனாகி நிற்கும் பருவத்தில் ஜி.வி.பிரகாஷின் காதலுக்கும் அப்பாவின் இந்த அடையாளமே எதிரியாக வந்து நிற் கிறது.

இனி ஊரில் இருந்தால் அப்பாவின் அடையாளமே தன்னை திரை போட்டு மூடிவிடும் என்பது புரிய வர, தனது புதிய அடையாளத்துக்காக பெங்களூரில் ஐடி வேலைக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ் அங்கே பிரபல தொழிலதிபர் அப்பாஸ் மகள் ஸ்ரீகவுரி பிரியாவுடன் காதலா கிறார்.
இந்தக் காதல் கை கூட வேண்டுமானால் தனது குடும்பம் பற்றியோ குறிப்பாக தந்தை பற்றியோ வாயை திறக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார்.

ஆனால் நினைத்த மாதிரி எல்லாம் நடந்து விடுமா, என்ன? வருங்கால மருமகளை பார்க்க தன் சொந்த பந்தங்களை
அழைத்துக் கொண்டு நிச்சயதார்த்த மண்டபத்துக்கு வந்து சேர்கிறார் ஜார்ஜ் மரியான்.
ஆனால் வந்த இடத்தில் அவரது எளிய தோற்றமும் உறவுகளின் கள்ளங் கபடமற்ற செயல்பாடும்
‘அப்பாஸ் அண்ட் கோ’வால் ஏளனமாக பார்க்கப்பட…
பதிலுக்கு ஜார்ஜ் மரியானும் தனது பரிவாரங்களுடன் இணைந்து ஊர்
கெத்தை காண்பிக்க…
இதனால்
வெகுண்டெழும் அப்பாஸ், உங்கப்பா மன்னிப்பு கேட்டால்தான் இந்த திருமணம் நடக்கும்” என ஜிவி பிரகாஷிடம் சொல்ல…
இது ஜார்ஜ் மரியானுக்கு தெரிய வர ”உன் வருங்கால மாமனார் தான் என்னிடம் மன்னிப்பு கேட்கணும். இல்லையேல் திருமணம் கேன்சல் என அதிர்வேட்டை தூக்கிப் போடுகிறார். இவர்களின் பிடிவாதம் தாண்டி
ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீகவுரி பிரியா ஒன்று சேர்ந்தார்களா? என்பதே ஹேப்பி ராஜ் படத்தின் கதைக்களம்.

ஜி.வி.பிரகாஷ், தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் படம் முழுவதும் பார்வையாளர்களை ஹேப்பி மூடில் பயணிக்க வைக்கிறார். கிளைமாக்ஸ்சில் தனது அப்பாவை நினைத்து கண்ணீர் விடும் காட்சிகளில் நம் கண்களிலும் நீர்த்துளிப் பிரவாகம். தனது தந்தைக்கும் காதலியின் தந்தைக்கும் இடை யிலான ஈகோ போரில் தன் காதல் நொறுங்கி விடுமோ என்ற அச்சத்தை கண்களில் அப்படியே கொண்டு வந்து விடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீ கெளரி பிரியாவுக்கு இந்த கேரக்டர் அவர் நடிப்புக்கு
கிடைத்த ஜாக்பாட் எனலாம். அலட்டிக் கொள்ளாத அதே நேரம் ஆழமான நடிப்பு காதல் காட்சிகளுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

ஜி.வி.பிரகாஷின் தந்தையாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், தனது குணசித்திர நடிப்பால் படம் முழுவதும் வியாபித்து நிற்கிறார். தங்கள் ஊருக்கு வந்த அப்பாசிடம் தனது குடும்ப முன் கதை சுருக்கம் சொல்லும் இடத்தில் அந்த காட்சியின் கனம் நம் மனதுக்குள்ளும் சுமையாகி விடுகிறது. இவரது நடிப்புக்கு விருது நிச்சயம்.

நாயகியின் தந்தையாக (மீண்டும்) அப்பாஸ். நாயகியின் பணக்கார அப்பாவாக தன் பங்கு நடிப்பை முழுமையாக தந்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் இவர் நடிப்பு வேறு லெவல்.

நாயகனின் அம்மாவாக வரும்
கீதா கைலாசம், பெங்களூர் வந்தபிறகு செய்யும் அட்டகாசங்கள் அத்தனையும் சிரிப்புக்கு உத்தரவாதம்.

மதுரை முத்து மற்றும் அதிர்ச்சி மதன் ஆகியோர்
சிரிக்க வைக்கிறார்கள்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தேவி மகேஷ், ஜி.வி.பிரகாஷின் கல்லூரி காதலி பிரார்த்தனா நாதன் ஆகியோர் கொடுத்த கேரக்டர்களில்
நிரம்பி
நிற்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ரசனை.
காட்சிகளை பளிங்கு போல் காட்சிப்படுத்த
இருக்கிறது.
மதன் கிரிஸ்டோபரின் கேமரா.
தந்தை – மகன் இடையிலான புரிதல் கதைக்குள் ஒரு காதல், அதற்குள் பெற்றோரின் ஈகோ என காட்சிப் படுத்தி எது நிஜமான சந்தோஷம் என்பதை,
உணர்வுப்பூர்வமாக கொஞ்சம் சிரிக்கவும் கொஞ்சம் சிந்திக்கவுமாய் தந்திருக்கிறார்
இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் உருவ கேலிக்கு எதிராக இவர் எடுத்த சவுக்கு அம்மாதிரி யானவர்களை நிச்சயம் பதம் பார்க்கும்.
படத்தின் பிளஸ் : அந்த கிராமத்து அப்பா ஜார்ஜ் மரியான்.
மைனஸ்: நீட்டி முழக்கி சொல்லப்பட்ட கதை.
ரேட்டிங் : 5.8/10.

Comments (0)
Add Comment