அந்த கிராமத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகாததால் அதை மூட அரசு முடிவு செய்கிறது. அதே ஊரில் போலீஸ்காரராக இருந்து கொண்டு ஆடுகளை வளர்த்து பெருத்த லாபம் பார்க்கும் வடிவேல் முருகனுக்கு மட்டும் இதில் உடன்பாடு இல்லை. எப்படியாவது ஒரு கேஸ் சிக்கினால் போலீஸ் ஸ்டேஷனை மூடும் முடிவை அரசு கைவிட்டு விடும். அதற்கு உடனடியாக ஒரு கேஸ் கிடைக்காதா என்று தவிக்கிறார்.
இந்த நேரத்தில்
அந்த ஊரில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வெட்டப்பட்ட தலை ஒன்று கிடக்கும் தகவல் தெரிய வர…
சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை தலையை கைப்பற்றி உடலை தேடுகிறது. உடல் கிடைக்காத நிலையில், தலை இருந்த இடம் அருகே ஒரு பையில் ஒரு கடிதமும், பணமும் இருக்க…
கடிதத்தில் “என் தலையை அடக்கம் செய்துவிட்டு, இந்த பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது
கொலை செய்யப்பட்டது யார்? என்ற தேடலை தொடங்கும் போது, கொலையுண்ட நபரின் பெயர் முத்து என்கிற காட்டான் என்று தெரிய வர…
யார் இந்த முத்து? எதற்காக கொல்லப்பட்டார்? தலை மட்டும் இருக்க அவரது உடல் எங்கே? என்ற கேள்வியை நோக்கி பயணிக்கும் காவல்துறைக்கு, அவரைப் பற்றிய பல ஆச்சரியமான தகவல்கள் தெரிய வருகிறது.
அநீதி பொறுக்காத அந்த முத்து, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத முத்து, வயது முதிர்ந்த பணியாளரை அவமானப்படுத்திய ஹோட்டல் முதலாளியை அந்த கணமே பணத்தால் அடித்து தொழிலாளியை முதலாளியை ஆக்கி அழகு பார்த்த முத்து… இப்படி முத்து முத்தான தகவல்கள் மட்டுமே காவல்துறையின் காதுக்கு வர…
யார்யா இந்த முத்து? என அவர்களுக்கே ஆவல் கூடிப் போகிறது.
10 அத்தியாயங்களை
கொண்ட இந்த தொடரில் ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் முத்துவின் மக்கள் சேவை குறித்த செயல்கள் ஆச்சரியப்பட வைப்பதோடு, அவர் யார் ?, எதற்காக இப்படி செய்கிறார் ? ஆகிய கேள்விகளையும் எழுப்பி விட…
அந்த முத்து யார் என்பதும், நல்லது செய்வதையே குறிக்கோளாக வைத்திருந்த அந்த முத்துவுக்கு எதிரிகள் எப்படி உருவானார்கள் என்பதையும் விவ
ரிக்கிறது மீதிக் கதை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடித்த முதல் இணையத் தொடர் என்ற அடையாளத்தோடு வெளியாகியிருக்
கும் இந்த இணைய தொடர் ஒரு விறுவிறுப்பான திரைப்படத்துக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது சிறப்பு.
முதல் அத்தியாயத்தி
லேயே வெட்டப்பட்ட தலையுடன் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி கேரக்டர் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பல்வேறு அவதாரங்களில் பயணிக்கும்போதே அந்த கேரக்டர் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாகி
விடுகிறது
பல ஊர்களில், பலவிதமான பணி செய்பவராக அறியப்படும் அவர், அனைத்து சம்பவங்களிலும் மனிதம் விதைக்கிறார். கைக்கடிகார பழுது நீக்கும் கடையில் பணியாளர், ஆதரவற்றோர் இல்லத்தின் மேலாளர், சரக்கு வாகன ஓட்டுநர், பெண் நடனக் கலைஞர்களின் பாதுகாவலர் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாபாத்திர பின்னணியோடு வலம் வருகிறார். தனது இயல்பான நடிப்பால் அத்தனை கதாபாத்திரங்களி
லும் கச்சிதமாக பொருந்துவதோடு, அந்தந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துக்குமார், காவலர்களாக நடித்திருக்கும் சிங்கம் புலி, வடிவேல் முருகன், ஏனைய பாத்திரங்களில் பார்வதி, பாலாஜி சக்திவேல், ரிஷா ஜேக்கப், மிலிந்த் சோமன், அபி நக்ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா என தொடரில் நடித்திருக்கும் அனைவரும் தங்கள் கேரக்டர்களில் சிறப்பாகவே வெளிப் படுகிறார்கள்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர்கள் மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் இருவரின் கேமராவும் தொடரை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
கலை இயக்குநர்கள் ஜாக்கி மற்றும் சாபு மோகன் ஆகியோரது பணி கூடுதல் பலம்.
எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன், இணையத் தொடருக்கான சஸ்பென்சுடன் திரைக்கதையை லாவகமாக கையாண்டு இருக்கிறார். குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ரொம்பவே தீனி போட்டு இருக்கிறார். எதிர்பார்க்கவே முடியாத அந்த கிளைமாக்ஸ்சில் நாயகன் விஜய் சேதுபதியோடு இயக்குனரும் எடுத்திருப்பது விஸ்வரூபம்.
இந்த இணையத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் மார்ச் 27 முதல் காணக் கிடைக்கிறது.