கருப்பு -திரை விமர்சனம்

‘இங்கே எல்லாமே இப்படித்தான். கடவுளே வந்தாலும் இதைஎல்லாம் கொஞ்சமும் மாற்ற முடியாது’ என்பது பல இடங்களில் நாம் கேட்கிற குரலாக இருக்கும்.
இதுவே நீதித் துறைக்குள்ளும் நடந்தால்…
சட்டத்தை தன் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு நீதி கேட்டு வந்தவர்களை பீதியாக்கும்
ஒரு இளம்
வழக்கறிஞரை சுளுக்கு எடுக்க சாமியே நேரில் அவதாரம்
எடுக்கிறார்.
வந்திருப்பது சாமி என தெரிந்தும் அசராத அந்த அடாவடி வழக்கறிஞர், ‘நீங்க சாமியா இருக்கலாம். அதற்காக இங்குள்ள முறைகேடுகளை
எல்லாம் மாற்ற முடியாது.
முடிந்தால் உங்கள் சர்வ சக்தியை பயன்படுத்தாமல் சராசரி மனிதராக போராடி பாருங்கள்’ என்று சத்தியம் வாங்கி விடுகிறார்.
அவரது சவாலை ஏற்றுக்கொள்ளும் சாமியாக வந்த அந்த கருப்புசாமி லஞ்சம் தொடங்கி வஞ்சம் வரையிலான அந்த நீதிமன்றத்தின் அவலங்களை முடிவுக்கு கொண்டு வந்தாரா என்பது
திகு திகு திரைக்கதை.
கருப்பு சாமியாக சூர்யா, வழக்கறிஞராக
ஆர்.ஜே.பாலாஜி. இருவருக்குள்ளும் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை
ஆட்ட பாட்டம் ஆக்கி கொண்டாட வைத்து விடுகிறது, திரைக்கதை.
ஜெய்பீம்’ படத்தில் நீதிக்காக போராடும் ஒரு நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, அதே நீதித்துறையில் நடக்கும் அநீதிகளையும், அநீதி இழைப்பவர்களையும் அழிக்கும் கருப்புசாமியாக மொத்த படத்தையும் தாங்குகிறார். மதுரை வழக்கறிஞர் சரவணன் கதாபாத்திரத்தில் அவரது கோர்ட்
என்ட்ரியே அக்மார்க் அமர்க்களம்.

வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தாலும், இங்கே எல்லாமே இப்படித்தான்…இதை யாராலும் மாற்ற முடியாது. முடிந்தால் நீங்க கடவுளாக அல்லாமல் சராசரி மனிதராக மாறி இதையெல்லாம்
மாற்றிக் காட்டுங்கள், என்று கருப்புசாமி சூர்யாவிடம் சவால் விடும் ஆர்.ஜே.பாலாஜி, நடிப்பில் முழு நேர வில்லனாகவே மாறி இருக்கிறார்.
பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நிஜமாகவே அவர் மாஸ்.

வழக்கறிஞராக நடித்திருக்கும் திரிஷா, சில காட்சிகளில் நீதிமன்றத்தில் வாதாடுகிறார். அவ்வப்போது கடவுளிடம் அன்பொழுக பேசுகிறார். கடவுளிடம் வரம் கேட்டு நீதித்துறையை மாற்ற முயற்சிக்கிறார். இப்படி சில பல வேலைகள் செய்தாலும், திரைக்கதையோடு ஒட்டாமல் தனித்து நின்று விடுகிறது அவரது கேரக்டர்.

பணத்துக்கு விலை போகும் நீதிபதியாக நட்டி அந்த கேரக்டருக்குள் பக்காவாக பொருந்தி போகிறார். நல்ல நீதிபதியாக ஆடுகளம் நரேன் ஓகே. திருட்டு போன தன் தங்க நகைகளை மீட்க போராடும் கேரள அப்பா-மகளாக நட இந்திரன்ஸ், சுவாசிகா எல்லை தாண்டாத நடிப்பில் முதல் பாதி கதையை எதிர்பார்ப்புடன் நகர்த்த உதவுகிறார்கள்.
முன்னாள் முந்திரி
வேல. ராமமூர்த்தியிடம் தனக்கு நேர்ந்த அவலத்துக்கு நீதி கேட்கும் பெண்ணாக ஷிவதா தனது பாத்திரத்தில் பொங்கி வழிகிறார்.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் கேமரா காட்சிகளின் பிரம்மாண்டத்தை கண்களுக்குள் நிறைக்கிறது.
சாய் அபயங்கரின் இசை பாடல்களின் பெரும்பாலான வரிகளை விழுங்கி விட, பின்னணி இசையில் மட்டும் தன் பெயரை தக்க வைத்துக் கொள்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் அவலங்களுக்கு சாமி மூலம் சாட்டையடி கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

மக்களின் கடைசி நம்பிக்கையாகவும், ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகவும் விளங்கும் நீதிமன்றங்கள், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் எப்படி செயல்படுகிறது என்பதில் தொடங்கி நீதித்துறையில்
விலைபோகும் நீதி
யின் காவலர்கள் வரை சகட்டுமேனிக்கு
சாட்டை சுழற்றி இருக்கிறார்.
நீதிமன்றத்தின் எழுதப்படாத விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் என பல விசயங்களை வெளிப்படையாகவே போட்டு தாக்கி இருக்கும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, அதை கருப்பசாமி துணையோடு சொல்லி கரையேறி இருக்கிறார்.
பிளஸ்: கடவுள்- மனிதன் இருவேறு கேரக்டர்களிலும் உடல் மொழி வரைக்கும் வித்தியாசம் காட்டும் சூர்யா.
பிளாஷ்: சமூகப் பிரச்சனைக்கு சாமி மூலம் தீர்வு சொல்ல முயலும் திரைக்கதை.

ரேட்டிங்: 6.8/ 10.

Comments (0)
Add Comment