இளம் வயதில் விதவையான தன் தாய்க்கு அவளது நடுத்தர வயதில் மகன்களே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கும் கதை.
உண்மையில் நடந்த சம்பவத்தை திரையிலும் நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள்.
இயக்குனர் சசியின் திரைப்படம் என்றாலே அதில் ஆழமான கதைப் பாங்கு இருக்கும். உணர்வின் தாக்கங்கள் இருக்கும். நெகிழ்ச்சி இருக்கும். கூடவே மகிழ்ச்சியும் இருக்கும்.
இந்தப் படத்திலும் அவரது இதே அம்சங்கள் இருக்கிறதா? வாங்க …கதைக்குள் போவோம்…
26 வயதில் கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வளர்த்து ஆளாக்க போராடுகிறாள். மகன்கள் வளர்ந்து ஆளான நிலையில் தனது
தனிமைக்கு துணை தேவை என்று எண்ணுகிறாள். அம்மாவின் இந்த எண்ணம் மூத்த மகனுக்கு தெரிய வந்ததும் அப்பாவின் இடத்தில் இன்னொருவரா? என கொதித்துப் போகிறான். தாயின் புதியவாழ்க்கை குறித்த எண்ணம் அதோடு அணைந்து போகிறது.
அடுத்து வந்த ஐந்து வருடம் அதே மகனை பக்குவப்படுத்தியதில் இப்போது தாயின் விருப்பம் தவறில்லை என்று உணர்கிறான்.
இது குறித்து தன் தம்பியிடம் பகிர்ந்த நிலையில் அவன் பலத்த எதிர்ப்பு காட்டுகிறான்.
ஒருவழியாக அண்ணன் தம்பி இருவரும் அம்மாவுக்கு புதிய துணை தேடும் முடிவுக்கு வர…
மாப்பிள்ளை தேடும் படலாம் அம்மாவின் தோழி மூலம் சுலபத்தில் முடிவுக்கு வருகிறது.
மாப்பிள்ளை ஏற்கனவே மனைவியை இழந்தவர். நல்லவர் கடின உழைப்பாளி. இது போதாதா? திருமணம் நிச்சயமாகிறது…
ஆனால் ஊரும் உறவுகளும் அத்தனை சுலபத்தில் இதற்கு பச்சைக் கொடி காட்டி விடுவார்களா, என்ன? சொந்த அண்ணனே தங்கையை கொல்லப் பார்க்கிறான். கெட்ட சிந்தனைகளையே தன் தொழிலாக வைத்திருக்கும் ஊர்ப் பெரியவர் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஊரையே கூட்டுகிறார். இதை மீறி தாய்க்கு மகன்கள் திருமணம் செய்து வைத்தனரா?என்பது கிளைமாக்ஸ்.
இளம்வயதிலேயே கணவனை இழந்த நிலையிலும் தனது இரண்டு மகன்களை ஆளாக்கிப் பார்க்கும் கேரக்டரில் சுவாசிகா . சரியாக சொல்ல வேண்டும் என்றால் கதையின் சுவாசமே இவர்தான். மனைவியாக, பாசமிகு தாயாக,சமூகத்தடை
களைத் தாண்டி காதல் உணர்வு அரும்பும் சராசரி மனுசியாக இப்படி எந்த கோணத்தில் பார்த்தாலும் நடிப்பு கொட்டிக் கொண்டே இருக்கிறது. புதிய கணவராக வரவிருக்கும் விஜய் ஆண்டனியை சந்தித்த நேரத்தில் தனது மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அந்த நடிப்பு எல்லாருக்கும் வாய்க்காதது.
படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி தான். ஆனால் அவரோ பாதி படத்துக்கு மேல் தான் திரைப்பிரவேசம் செய்கிறார். கள்ளங் கபடம் அற்ற ஒரு கிராமத்து நடுத்தர மனிதனை நடிப்பில் கண் முன் நிறுத்து கிறார்.
சுவாசிவாவின் மகன்களாக அஜய்
திஷான், சக்தி வருகிறார்கள்.தாயும் உணர்வு மிக்க ஒரு பெண் தான் என உணரத் தலைப்படும் இடம் தொடங்கி இவர்களின் நடிப்புக் கொடி
பறக்கத் தொடங்குகிறது.
நாயகிகளாக வரும் காவியா அனில், பாடினி குமார் இருவரும் வந்தவரை நிறைவு.
சுவாசிகாவின் அண்ணனாக கருணாஸ். தங்கை குடும்பம் மீது பாசம் காட்டும் இடத்திலும், புதிய வாழ்வுக்கு தயாராகும் தங்கையை கொல்லத் துடிக்கும் இடத்திலும் அந்தக் கிராமத்து அண்ணன் கேரக்டர் இவரது நடிப்பில் பளிச்சிடுகிறது.
கன்னியாஸ்திரி கேரக்டரில் கொஞ்சமே கொஞ்சமாய் வந்து போக லிஜா மோல் ஜோஸ் தேவையா?
ஊரில் என்ன நடந்தாலும் அதை மோப்பம் பிடிக்கும் கெட்ட மனிதராக பாலாஜி சக்திவேல் ஜமாய்த்திருக்கிறார்.
ஒரு சில காட்சிகளே என்றாலும் கதையின் திருப்பு முனைக்கு உதவும் வாத்தியார் கேரக்டரில் அருள்தாஸ் அம்சம்
யூடியூபர் தம்பதிகளாக பக்ஸ்,வினோதினி ஆரம்பத்தில் கடுப்பேற்றி கிளைமாக்சில் கரகோஷம் வாங்குகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கதையின் உணர்வுகளை இம்மி யளவும் குறையாமல் திரைக்கு கொண்டு வந்து விடுகிறார்.
பாலாஜி ஸ்ரீராம் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். குறிப்பாக அந்த அம்மா பாட்டுக்கு ஆயுள் அதிகம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்தோம்.
உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் சசி. இந்த படத்தை பார்த்த பின்பாவது தாயை ஒரு மனுசியாக உணர்ந்து கொள்ளும் மகன்கள், மகள்கள் அதிகரித்தால் அதுதான் இந்த படத்தின் வெற்றி.
பிளஸ்; திரைக்கதைக்குள் பொதிந்திருக்கும் உண்மைக் கதை.
மைனஸ்: கட்டுக்கோப்புக்குள் அடங்காத முதல் பாதி .
பிளாஷ்: கிராமத்து அம்மாவாக வாழ்ந்து காட்டிய சுவாசிகா.
ரேட்டிங்: 8/ 10.