‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவா நடிக்கும் புதிய படம் ‘தகப்பன்’

நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ (TTT) படம் வெற்றி பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து ஜீவா நடிக்கும் புதிய படத்துக்கு தகப்பன் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். ‘கிடா’ படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த ரா. வெங்கட் இந்த படத்தை இயக்குகிறார்

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் மதுரையில் தொடங்கியது. கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா – மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார்.

கே.குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவை எம்.சுகுமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை கே.பி.நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை எம். செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை டி.உதய் குமார் மேற்கொள்ள, புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆர்.பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்ற
னர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் ’தகப்பன்’ அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment