தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக் ஷன் தயாரித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படம் ஜூலை 31-ல் வெளியாவதாக இருந்தது. அப்பா விஜய்யின் ‘ஜனநாயகன்’ அதற்கு முந்தின வாரத்தில் வெளியானதால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தை விஜய் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். அவர் அளித்துள்ள பேட்டியில், “உங்கள் தந்தையிடம் இருந்து இப்போது கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் எதனை கற்று கொள்வீர்கள் என்ற கேள்விக்கு,
“நான் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தையும், தனி பெயரையும் உருவாக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். நானும் அதே எண்ணத்தில் இருந்தேன். எங்கள் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. ‘உனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை அணுகலாம். ஆனால், நீயே முயற்சி செய்ய வேண்டும்’ என்று அப்பா கூறினார்.
வாழ்க்கையில் வரும் அனுபவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பம். எனக்கு எப்போதும் துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என் குடும்பத்தினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், “உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் நீங்கள் இயக்கிய ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு ‘வாங்க ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம்’ என்று அழைத்தால் இந்தியாவிலிருந்து உங்கள் முதல் சாய்ஸ் எந்த நடிகராக இருக்கும்? ” இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில் அப்பா மீது அவர் கொண்ட அன்பையும் சேர்த்து வெளிப்படுத்துவதாக இருந்தது.
“எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பா தான். இருவரும் இணைந்தால் அது அட்டகாசமான கூட்டணியாகவும் இருக்கும். நான் இப்போது தெரிவிக்கும் இந்த கருத்தை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.
தந்தை தமிழக முதல்வராகி விட்ட போதிலும், ஹாலிவுட் நட்சத்திரம் ரேஞ்சுக்கு இன்னும் உயர்த்தி பிடிக்கிற மகன்கள் தான் அதாவது ரசிகர்கள் தான் முதல்வரின் பெரும் பலமாக இருக்கிறது.