அப்பா பிரபல தொழிலதிபர். அவரின் ஒரே வாரிசான மகனுக்கோ புகைப்படக் கலையில் நாட்டம் அதிகம். என்றாவது ஒருநாள் தான் எடுத்த புகைப்படம் உலகின் கவனம் ஈர்க்கும் என்று நம்புகிறவன் அவன். ஆதலால் கேமராவும் கையுமாக. காடு மேடு என்று சுற்றிக் கொண்டிருக்கிறான்.
இதுவரை யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு அரிய மரத்தை புகைப்படம் எடுப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதியில் பயணிக்கிறான். அப்போது வழிதவறி ஆபத்து நிறைந்த வனப்பகுதிக்குள் சிக்கி வெளியேற வழி தெரியாமல் தவிக்கிறான். அங்கே அவன் தங்கிய மூன்று இரவுகளில் பல ஆபத்தான சூழ்நிலைகளை எதிர் கொள்கிறான்.
காட்டில் பயணிக்கும் ஒவ்வொரு நிமிடமும் திகில் சூழல்களை தாண்டி அவனால் அந்த அதிசய மரத்தை படம் பிடிக்க முடிந்ததா? உள்ளே போனால் உயிருடன் திரும்ப முடியாத அந்த காட்டுக்குள் சிக்கிக் கொண்டவன் மீட்கப்பட்டானா என்பது கிளைமாக்ஸ் வரையிலான
மீதிக்கதை.
எழுதி இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், தனிமனித பயணத்தை கதைக்களமாக வைத்துக்கொண்டு மர்மம், திகில், அமானுஷ்யம், உளவியல் ஆகிய உணர்வுகளின் பயணமாக இந்த படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடிகராகவும் முத்திரை பதித்து இருக்கிறார். அப்பாவிடம் பேசும்போது அப்படியே பணக்காரத்தனம்.
ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரமும், அவரது நடிப்பும் நமக்குள் சற்று அந்நியப் பட்டாலும் இரண்டாம் பாதியில் தனது நடிப்பால் அதை எல்லாம் சரி செய்து விடுகிறார். குறிப்பாக காட்டுக்குள் சிக்கிக்கொண்ட பிறகு இவரது நடிப்பு வேறு லெவல்.
நாயகியாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அனனி சுவாமிநாதன் நிறைவான நடிப்பை தந்து போகிறார்.
நாயகனின் நண்பனாக வரும் கருணாகரன், தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் உறியடி சிவாவின் நடிப்பும் ஓகே.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேனின் அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நாயகனின் அம்மாவாக தேவி மகேஷ், அளவான நடிப்பு மூலம் கவர்கிறார். குறிப்பாக சிறு வயது மகனிடமான இவரது சம்பாஷனைகள் ஒவ்வொன்றும் இதயப் பதிவுகளில் காட்சியாய், நல்ல நடிப்புக்கு சாட்சியாய் நின்று பேசுகின்றன.
ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத்தின் கேமரா காட்டுக்குள்ளே திருவிழாவே நடத்தி இருக்கிறது.காட்டின் அமைதியையும், ஆபத்தையும் பார்வையாளர்கள் அச்சமடையும் வகையில் காட்சிப்படுத்த முயன்ற இவரது கேமராவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை நாயகன் காட்டுக்குள் சிக்கிக் கொண்டதிலிருந்து விஸ்வரூபம் எடுக்கிறது.
நாயகன் கதாபாத்திரம் மட்டுமே பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசையின் வீரியம் அதிகம்.
ஆபத்து நிறைந்த ஒரு பயணக் கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருக்கிறார்,
இயக்குநர் அஷ்ரப், ஒரு புகைப்பட கலைஞரின் பயணத்தை கருவாக வைத்துக்கொண்டு, எழுதியிருக்கும் திரைக்கதை, உயிர் பிழைக்க துடிக்கும் தனிமனித போராட்டத்தையும், சாகசத்தையும் காட்சி மொழியில் கொஞ்சம் திகிலுடனே பரிமாறி இருக்கிறார்கள்.
பிளஸ்: பசுமை பொங்கி வழியும் காடு தொடர்பான காட்சிகள் அத்தனையும்.
பிளாஷ்: அம்மா- குட்டி மகன் அன்பில் தோய்த்த அந்த முன் கதை சுருக்கம்.
ரேட்டிங்: 5.5/ 10.