அப்பா மிகப்பெரிய டான். மகனோ அதற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் சாதாரண வேலை பார்க்கும் நடுத்தர குடும்பத்து இளைஞன். ஆளுக்கு ஒரு மூலையில் எங்கோ தனித்து வாழும் இவர்களை காலம் எப்படி இணைக்கப் பார்க்கிறது என்பது கதை.
மருந்துவிற்பனை பிரதிநிதியாக 17,500 ரூபாய் சம்பளத்தில் நடுத்தர வாழ்வு வாழும் விஷாலுக்கு எப்படியாவது ஒரு கார் வாங்கி விட வேண்டும் என்பது லட்சியம். பெண் கொடுத்த மாமனார் குடும்பமும் அதையே வலியுறுத்துகிறது.
புதிய கார் என்றால் தனது பட்ஜெட் தாங்காது என்பதை உணரும் விஷால், பழைய கார் ஒன்றை வாங்குகிறார்.
இந்தக் காரில் மகிழ்ச்சியாக மனைவியையும் மகன் மகளையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்யும் போது எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு மனைவியையும் மகளையும் பறிகொடுக்கிறார்.
யார் வம்புக்கும் போகாத தனக்கு எப்படி எதிரிகள்? அதுவும் ரெண்டு உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு…
யோசிக்கும் விஷாலுக்கு அப்போது கிடைக்கிறது விடை.
விஷால் வாங்கியது தாதா வட்டத்தில் உள்ள ஒருவரின் காரை. அந்தக் கார் விற்கப்பட்டது தெரியாமல் காரின் நம்பரை கண்டதும் தாதாவை காலி பண்ண காரை சல்லடை ஆக்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வர…
இப்போது மகனின் கோபம் தந்தை மீது திரும்புகிறது. தாய் கொல்லப்படவும் தான் அனாதை ஆக்கப்படவும் தந்தை தான் காரணம் என்ற கோபத்தை மனதுக்குள் நெருப்பாக அடக்கி வைத்திருந்த மகன், இப்போது மனைவி மகளின் ஈமச் சடங்குக்கு வரும் தனது தந்தையை தாறுமாறாக திட்டி அனுப்புகிறார்.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? தந்தை- மகன் இணைந்தனரா என்பது மீதிக்கதை.
இரண்டு வேடங்கள் ,மூன்றுவித தோற்றங்கள் என படம் முழுக்க நிறைந்திருக்கிறார் விஷால். அந்தந்த வேடத்துக்கேற்ப நடிக்கவும் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் பொறி பறக்கிறது.
தந்தை விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலியும், மகன் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் வருகிறார்கள். விஷாலை மிரட்டி காதல் வாங்கும் இடத்தில் அஞ்சலி கொடி பறக்கிறது. நடுத்தர குடும்பத்தின் அந்த மனைவி போர்ஷன் துஷாரா விஜயனை நமக்குள் நெருக்கமாக்கி விடுகிறது.
நகைச்சுவைக்கென தம்பிராமையா. பதம்குமார்,ஜெயப்பிரகாஷ் சிறப்பு. தாதா விஷாலின் உயிர் நண்பராக ஜான் விஜய் கச்சிதம்.
ரிச்சர்ட் எம்.நாதன், அபிநந்தன் ஒளிப்பதிவு காட்சிகளை கண் முன் நிறுத்துகிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் பிரமிப்பு.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை டபுள் ஓகே.
பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் சண்டைப்பயிற்சி இயக்குநர் திலீப்சுப்பராயனின் பேர் சொல்லுகிறது.
படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த், படத்தின் நீளத்தை அரைமணி நேரமாவது குறைத்து இருக்கலாம்.
நடிகர் விஷால் முதன்முறையாக இயக்குனராகவும் தடம் பதித்திருக்கிறார். எடுத்துக்கொண்ட கதையும் அதை சொன்ன விதமும் ரசிகர்களை பதம் பார்த்து விட்டது. சீனாவில் இருந்து இருந்து கப்பலில் இந்தியா வரும் வாகன போலி பாகங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில், அதற்கான முன்கதை பின்கதை சரியாக அமையாமல் படம் தடுமாறுகிறது.
அப்பா- மகன் இடையேயான பாசப்போராட்டம் பழையது என்றாலும் அது ஒன்று தான் படத்தை
கொஞ்சமேனும் நம்முடன் இணைக்கப் பார்க்கிறது.
விஷாலுக்கு இயக்கம் புதுசு. எடுத்துக்கொண்ட கதையில் காட்சிகள் புதுசு இல்லை. நல்ல நடிகருக்கு இயக்குனர் அடையாளமும் தேவை தான். ஆனால் அதற்கான கதைக்களம் தான் காலை வாரி விட்டது.
ஆர்வம் தவறில்லை. ஆர்வக்கோளாறும் தவறில்லை. இங்கே ஆர்வமே கோளாறாகி இருக்கிறது. அதுதான் பிரச்சினை.
மகுடம், ம(ண்)குடம்.