மொத ராத்திரி–திரை விமர்சனம்

ஒரு சீரியஸ் கதையை சிரிப்பும் களிப்புமாய் தர முடியுமா? தந்திருக்கிறார்கள், இந்த மொத ராத்திரி திரைப்படத்தில். இதற்காக தொடக்கத்திலேயே இயக்குனர் ராஜா கருப்பசாமிக்கு ஒரு சபாஷ் சொல்லி விடுவோம்.

காதல் தோல்வியால் ஊரை விட்டு துபாய் செல்லும் நாயகன், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர, வீட்டிலோ அவர் வரும் நாளை அவரது திருமண நாளாக்க முடிவு செய்கிறார்கள். அவருக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் நடந்து மணப்பெண் வரை ரெடி.

ஆரம்பத்தில் பிடிவாதம் காட்டினாலும் குடும்பத்தாரின் கட்டாயமும் கண்ணீரும் நாயகனை ஒரு வழியாக திருமணத்திற்கு தலையாட்ட வைத்து விடுகிறது.

திருமணம் நடக்கிறது . மொத ராத்திரியும் வருகிறது. தனது மனைவியிடம் ரிஷிகாந்த், மனம் திறந்து பேச முயற்சிக்கிறார். ஆனால், மணப்பெண்ணோ அங்கிருந்து வெளியேறி தன் காதலருடன் ஓட முயற்சிக்கிறாள்.

தாலி கட்டிய பிறகு மனைவியின் முந்தைய காதல் விஷயம் தெரிந்தாலே குடும்பத்தில் பூகம்பம் புறப்படும். கல்யாண மாப்பிள்ளை இது விஷயத்தில் என்ன முடிவு எடுத்தார்? அவரது கல்யாண வாழ்க்கை வெற்றி பெற்றதா? அல்லது மணப்பெண்ணின் காதல் வெற்றி பெற்றதா ? என்பது கலகலப்பு பஞ்சம் இல்லாத திரைக்கதை.

ஒரே நாளில் நடந்து முடியும் இந்த கதைக்குள் தொடக்கம் முதல் முடிவு வரை கொஞ்சமும் குறையாத விறுவிறுப்புடன் காட்சிகளை அமைத்து தனது திரை வரவை தக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

நாயகனாக மருது கேரக்டரில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் நடிப்பில் அத்தனை இயல்பு. மனைவியின் முன்னாள் காதல் தெரிய வந்த நிமிடத்தில் இருந்து அடுத்து என்ன செய்வது என்ற தவிப்பை, இயலாமையை நடிப்பில் சுலபமாக கொண்டு வந்து விடுகிறார். இந்த விதத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல ஹீரோ கிடைச்சாச்சு.

நாயகியாக வரும் அனிஷ்மா அனில்குமாருக்கு ‘சிறை’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் இன்னொரு ஜாக்பாட்.. காதலனை மறக்க முடியாமல் தவிக்கும் இடத்தில் ஒரு ரியாக்ஷன்… அதே காதலன் மீதான எரிச்சலின்போது காட்டுவது இன்னொருவித ரியாக்ஷன்… கணவனுக்கு தன் பழைய காதல் தெரிந்த நிலையில் இனி எது வேண்டுமானாலும் ஆகிவிட்டு போகட்டும் என்ற மனநிலையில் காட்டும் அந்த ‘அடப் போங்கடா’ ரியாக்ஷன் என என காட்சிக்கு காட்சி நடிப்பு சிக்ஸர்களாக வீசி கதையின் மையப் புள்ளியாகவே வலம் வருகிறார். உணர்ச்சி பொங்க பேசித்தான் நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. பார்வையிலே அதை உணர்த்த முடியும் என்பதை நடிப்பில் நிரூபித்து காட்டியிருக்கிறார். குறிப்பாக அந்த கிளைமாக்ஸில் இவரது முக பாவங்கள் வேற, வேற லெவல்.

இவர்களுக்கு அடுத்த இடம் சேத்தனுக்கு. உள்ளூர் பூசாரியாக வந்து ஊர் மக்கள் தன்னை மதிக்கவில்லை என்று ஆற்றாமையில் பொங்கி வழியும் இடங்கள் அத்தனையும் இவர் நடிப்புக்கான மகுடம். கிளைமாக்சில் மணமக்களுடன் இவர் சம்பந்தப்பட்ட காட்சி, தேர்ந்த நடிப்புக்கு சாட்சி.

கல்யாண வீட்டு உறவினர்களில் தனித்து கவர் பவர்கள் பக்ஸும் அப்துல் லீயும். வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் கல்யாண வீட்டில் பக்ஸ் சண்டையை கிளப்ப, அப்துல் அவரை சமாதானப்படுத்த
முற்பட என்று இவர்கள் நடிப்பு கச்சேரியில் காட்சிகள் நகைச்சுவை துக்கடாவாகபொங்கி வழிகின்றன.

அந்த அப்பா கேரக்டரில் வெளிப்படுவது அப்பாவிதத்தனமா, அல்லது வினயமா என்பதை நடிப்பின் இரு வேறு நிலையில் அடித்து ஆடி இருக்கிறார்,

ஏ.வெங்கடேஷ். சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம் பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் கதை நிகழும் தூத்துக்குடி வட்டார முத்துக்களாகவே பிரகாசிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதியின் கேமரா கல்யாண கும்பலை நேர்த்தியாய் நம் கண் முன் நிறுத்துகிறது.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தோடு இணைந்த அதிசயங்கள்.

திருமண ஏற்பாடுகளோடு காலையில் தொடங்கும் கதை, மொத ராத்திரியோடு முடிவடைந்தாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் மனித மனங்களை அலசியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, திரைக்கு கிடைத்த இன்னொரு கலைப் பொக்கிஷம்.

கணவன் ஏற்கனவே காதல் தோல்வியில் அடிபட்டவன். மனைவியோ தாலி கட்டிய அன்றே காதலனை தேடி ஓடத் துடிக்கிறாள்.

இப்படி பார்த்தால் எவ்வளவு சீரியஸ் கதை இது. ஆனால் இதை சிரிக்க சிரிக்க தந்திருக்கிறாரே , அங்கே தான் நம் ஈசியாக இடம் பிடித்து விட்டார் இயக்குனர்.

இந்த நல்ல கதைக்குள் ஒலி ஒளி சவுண்டு சர்வீஸ் இளைஞனுக்கும் ஏ.வெங்கடேஷூக் குமான அந்த சாதியக் கோடு மட்டும் தவிர்க்கப்பட வேண்டியது. மற்றபடி இந்த மொத ராத்திரி, மொத்த ராத்திரிக்கு மான சந்தோஷம்.

பிளஸ்: ஜாலியான கதைக்களம்.

பிளாஷ்: இயக்குனரே காதலனாக வந்து கொடுக்கும் காமெடி அலப்பறை.

ரேட்டிங்: 7.2/10.

Comments (0)
Add Comment