ராம் அன்ட் லீலா -திரை விமர்சனம்

மாலை ஆறு மணியானால் காதலனை அடியோடு தவிர்க்கும் நாயகி.

ஒருவேளை சின்னத் தம்பி பட கவுண்டமணி மாதிரி மாலைக்கண் நோயோ என நாயகன் சந்தேகப்பட்டால்…. இது வேறு காரணம். வேறு கதை. கொஞ்சம் கதைக்குள்ளும் எட்டிப் பார்ப்போமா…

திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் திண்டாடும் நாயகன் ரியோவை, காதல் நாயகி வர்டிகா வடிவில் தேடி வருகிறது, காதல்.

இந்த காதலுக்கு நாயகி போடும் ஒரே கண்டிஷன், மாலை 6 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன், அதனால் 6 மணிக்கு மேல் என்னை சந்திக்க முயற்சிக்கக் கூடாது.

தொடக்கத்தில் காதல் மயக்கத்தில் நாயகனுக்கு இந்த விஷயம் பெரிதாக தோன்றவில்லை.

போகப் போக காதலியின் ‘மாலை 6 மணிக்கு மேல் சந்திக்கக் கூடாது’என்ற நிபந்தனை பல சந்தேகங்களை கிளப்ப… இப்போது 6 மணி ரகசியத்தை தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் என்ற நிலை.

ஒரு வழியாக காதலி வாயிலாக அந்த ஆறு மணி ரகசியம் தெரிய வந்தபோது மனதுக்குள் பெரிய பூகம்பத்தை ரியோ உணர்கிறார். அந்த ரகசியம் தெரிந்த பிறகும் ரியோ, வர்டிகாவை காதலித்தாரா ?, அவர்கள் காதல் கல்யாணத்தில் முடிந்ததா? என்பதை காமெடியாக சொல்வதே இந்த ‘ராம் அன்ட் லீலா’.

கல்யாணத்திற்காக ஏங்கும் இளைஞர் ராம் கதாபாத்திரத்தில் ரியோ கச்சிதம். காமெடி கலந்த நடிப்பும் புதுவிதமான ரியோவை திரைக்கு தருகிறது.

காதலுக்காக ஏங்குவது…காதலி குடும்பத்தின் ரகசியம் குறித்து பெற்றோரிடம் சொல்லத் தயங்குவது…
அந்த பிரச்சனையை தீர்க்க காதலி பக்கம் நிற்பது என நடிக்க கிடைத்த அத்தனை இடங்களிலும் சிக்ஸராக விளாசித் தள்ளுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். நடிப்பும் வருகிறது.

நாயகனின் தந்தையாக சேத்தன், தாயாக மாளவிகா அவினாஷ், தங்கையாக தாஃபியா அபு, மாமனாக முனீஷ்காந்த், நண்பராக பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக தீபா வெங்கட், மாமாவாக மாகாபா, தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி என எல்லாருமே கதையின் களம் அறிந்து தங்கள் பாத்திரங்களை பளபளப்பாக்கி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுனனின் கேமரா காட்சிகளை கலர்புல்லாக கண்களுக்குள் நிறைக்கிறது.
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்பத் திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை
இதம்.

எழுதி இயக்கியிருக்கும் ராமச்சந்திரன் கண்ணன், எந்த ஆங்கிலப் பட பாதிப்பில் இந்த கதையை உருவாக்கினார் என்று தெரியவில்லை. (இப்படி சொல்லக் காரணம், இதே கருவோடு மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஒரு படம் வெளியானது என்பது இயக்குனருக்கும் நினைவு இருக்கலாம்) ஆனாலும் எடுத்தாண்ட கதையை சுவாரசியமாக சொல்ல முடிந்ததில் வெற்றி பெற்று இருக்கிறார்.
யூகங்களை கடந்த நாயகியின் பிரச்சனைக்கு சொல்லப்படும் அந்த முன் கதை அத்தனை களேபரத்திலும் சிரிப்பை வரவழைத்து விடுகிறது.

பிரச்சனை என்னவென்று தெரிந்த பிறகு, காதலர்கள் ஒன்று சேர்வதில் இருக்கும் அந்த சிக்கலை தாண்டி காதல் எப்படி ஜெயிக்கிறது என்கிற அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே சூப்பர்.

பிளஸ்: அண்ணனின் காதலுக்கு வினையாக வந்து நிற்கும் தங்கை கேரக்டர்.

பிளாஷ்:
நாயகியின் பாத்திரப்படைப்பு.

ரேட்டிங்: 6,5/10.

Comments (0)
Add Comment