கிராமத்தில் மனைவி பிரியாபவானிசங்கர், மகள் நட்சத்திரா ஆகியோருடன் வசித்து வருகிறார், ரவிதேஜா. குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர், தீவிர ஐயப்ப பக்தரும் கூட. அதனால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்கிற காலகட்டத்தில் மட்டும் குடிக்க மாட்டார்.
அதேநேரம் தனது ஒரே மகள் மீது அளப்பரிய பாசம். மகளும் அப்பா மீது உயிரையே வைத்திருக்கிறார்.
தன் மகள் மட்டுமின்றி ஊரில் இருக்கும் எல்லாச் சிறுமிகளையும் மகள் போலவே நேசிக்கிறார், ரவி தேஜா. இந்நிலையில் பக்கத்து ஊர் பள்ளியில் படிக்கும் இந்த ஊர் சிறுமிகளுக்கு கொடுமை நடக்கிறது. அதைத் தெரிந்து கொள்ளும் ரவி தேஜாவின் மகள் நட்சத்திரா, தந்தையிடம் அந்தத் தகவலை சொல்ல முனைகிறாள். ஆனால் அதற்குள் என்னென்னவோ விபரீதம் நடந்து முடிகிறது.
அதில் வெகுண்டெழும் நாயகன் பொங்கும் எரிமலையாகி விபரீதம் நிகழ்த்தியவர்களை என்ன செய்கிறார்? எப்படிச் செய்கிறார்? என்பதை அதிரடி களத்தில் சொல்லியிருப்பதே இந்த ‘இருமுடிகட்டு.’
நாயகனாக வரும் ரவிதேஜா,கிராமத்து வெள்ளந்தி மனிதர் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். மகள் மீதான அவரது பாசம் அபரிமிதம். சபரிமலைக்கு போய்விட்டு வந்த கையோடு குவாட்டர்களோடு மல்லுக் கட்டும் அந்த காட்சி ஒரு மொடா மதுப்பிரியரை கண் முன் நிறுத்துகிறது .முதல்பாதியில் அமைதியானவராக, எல்லோருக்கும் நண்பராய் தோன்றி அடுத்தபாதியில் விஸ்வரூபம் எடுக்கிற அந்த கேரக்டரை தன் நடிப்பில் இயல்பாக வெளிக்கொண்டு வருகிறார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் , நடிப்பில் மாஸ் மகாராஜாவாக அவரை முன்னி றுத்துகிறது.
ரவிதேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியாபவானிசங்கர், அன்பான குடும்பத்தலைவியாக திரை வலம் வருகிறார்.
ஐயப்ப பக்தராக, குருசாமியாக வரும் சாய்குமார், அந்த கேரக்டரை அழகாக தனது நடிப்பால் சுமக்கிறார். அநீதிக்கு தலை வணங்க வேண்டிய அந்த கிளைமாக்ஸ்சில் தடுமாறி தடம் மாறும் இடம் அவரது நடிப்பின் இன்னொரு பரிமாணமாக ஜொலிக்கிறது.
ரவிதேஜாவின் மகளாக வரும் நட்சத்திரா, எந்த இடத்திலும் நடித்தது போலவே இல்லை.
தந்தை மீது பாசத்தை கொட்டும் அத்தனை இடங்களிலும் அந்த நேசம் நம் இதயம் வரை இணைந்து கொள்கிறது.
வில்லங்க டீச்சராக சுவாசிகா. இப்படி ஒரு வேடத்தை ஏன் ஏற்றுக்கொண்டார் என்ற கேள்விக்கு பதிலாக அமைந்திருக்கும் அவரது கேரக்டர் நிஜமாகவே பகீர் ரகம்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணுசர்மாவின் ஒளிப்பதிவில் அழகான கிராமத்துக்காட்சிகள் கண்களுக்கு
குளுமை.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஐயப்ப பக்தர்களுக்கான பாடல் உட்பட எல்லாப் பாடல்களுமே ரசிக்கும் ரகம்.
பின்னணி இசை காட்சிகளோடு நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறது.
பொறி பறக்கும் அனலரசுவின் காட்சிகளுக்கு ஒரு சபாஷ்.
எழுதி இயக்கியிருக்கும் ஷிவா நாராயணா, தந்தை மகள் பாசப் பின்னணியில் ஒரு சமுதாய பிரச்சனையை அழகாக கையாண்டு இருக்கிறார்.
பிளஸ்:
திருப்புமுனை யுடன் கூடிய கதைக்களம்.
பிளாஷ்: சிறுமி நட்சத்திராவின் இயல்பான நடிப்பு.
ரேட்டிங்; 7.8/10.