நாயகன் இளனும் நாயகி சான்வி மேக்னாவும் காதலிக்கிறார்கள். இந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, திருமணமும் நடக்கிறது.
திருமணம் முடிந்த சில மணித்துளிகளில் மனக் கோலத்துடன் மணப்பெண் பிடிக்கிறார் ஓட்டம். பெற்றோரைப் பிரிந்து என்னால் உங்கள் வீட்டுக்கு வரமுடியாது என காரணமும் சொல்கிறார். அதனால் இளன் மனைவி வீட்டோடு ஐக்கியம் ஆகிறார்.
மனைவி கை நிறைய சம்பாதிக்கிற அந்த வீட்டில் வேலை எதுவும் இல்லாத அந்த வீட்டு மாப்பிள்ளைக்கு என்ன மரியாதை கிடைக்கும்? அதுதான் அந்த வீட்டு மாப்பிள்ளை இள னுக்கும் கிடைக்கிறது. மனைவியின் அதிக அன்புக்காக அத்தனையும் பொறுத்துக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் மனசு தாங்காத இளனின் தாய் மகனை தேடி வந்து அழைக்கிறார். ‘உன் அப்பா உனக்கு ஒரு வேலை பார்த்து வைத்திருக்கிறார். அதை பார்த்துக் கொண்டு கவுரவமாக உன் மனைவியுடன் நம்ம வீட்டிலேயே வந்து இரு’ என்கிறார்.
இளனின் மனைவியோ, ‘எங்கள் வீட்டிலேயே இருங்கள் எந்த குறையும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். நாயகன் என்ன முடிவெடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.
நாயகனாக நடித்திருக்கும் இளன், ஆரம்பக் காட்சிகளில் சற்றே தடுமாறினாலும் போகப் போக சுதாரித்துக் கொண்டு அந்த கேரக்டராகவே வாழத் தொடங்கி விடுகிறார். சைலண்ட் கில்லர் மாமியாரால் அவர் அவமானப்படுத்தப்படும் போது அதை மனைவியின் அன்புக்காக தாங்கிக் கொள்கிற இடங்கள் அவர் நடிப்புக்கும் சேர்த்து மகுடம் சூட்டுகின்றன.
நாயகி சான்வி ஆளும் அழகு. நடிப்பும் அழகு. கணவர் மீது தன் தாயார் குறை சொல்லும் காட்சியில், கணவரை திட்டுவதற்கு மாறாக அரவணைத்து அன்பை கொட்டும் காட்சியில் மனசுக்குள் ‘ பச்சக்’என்று ஒட்டிக் கொள்கிறார்.
நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, தங்கள் வீட்டு மாப்பிள்ளையிடம் காட்டும் அந்த சைலண்ட் வில்லித்தனம் அழகோ அழகு.
எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், மாறன், கணேஷ், ‘ராஜா ராணி’ பாண்டியன், ராஜாமணி, மோகனப் பிரியா,ஆருஷ் ஆகிய அனைவரும் கலகல கதைக்கள மாந்தர்களாக வந்து சிறப்பு சேர்க்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் செந்திலை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம்.
தினேஷ் கே.பாபு ஒளிப்பதிவில் காட்சிகள் வண்ண மயம். குறிப்பாக கல்யாண காட்சிகள் அந்த மண்டபத்துக்கே நம்மை அழைத்து சென்று விடுகிறது.
யுவனின் இசையில் பாடல்கள் ரசிக்கவும், பின்னணி இசை வழக்கம் போல் வியக்கவும் வைக்கின்றன.
கதை மற்றும் திரைக்கதையை நிவேதிதா போகங்கர் எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குநர் இளன் மற்றும் ஹரிஷ்.ஜி.ஒய் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
நாயகனாக நடித்து இயக்கியும் இருக்கிறார் இளன். பார்த்து பார்த்து செதுக்கிய இந்த கதையில் தாலி கட்டிய கழுத்தோடு மணமகள் ஓட்டம் பிடிப்பதற்கு அழுத்தமான காரணம் சொல்லி இருக்கலாம்.
வீட்டு மாப்பிள்ளை மனதளவில் துவளும் போதெல்லாம் மனைவியின் ஆதரவான அணுகுமுறைக் காட்சிகள் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
பிளஸ்: மகன் மீதான கோபத்தை வெளியேயும், பாசத்தை உள்ளுக்குள்ளும் வைத்துக் கொண்டிருக்கும்
எம்.எஸ்.பாஸ்கரின் அப்பா கேரக்டர்.
பிளாஷ்: மருமகன் மீது மரியாதை தொடங்கும் இடத்திலிருந்து மாமியார் ராதிகா கேரக்டர்.
ரேட்டிங்: 6.5/10.
இந்தப் படம் நெட் பிளிக்ஸ் இணையதளத்தில் ஆகஸ்ட் 21 முதல் காணக் கிடைக்கிறது.