குற்றம் தவிர் – திரை விமர்சனம்

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை தோலுரித்து காட்டியிருக்கும் படம்.அதை அக்கா-தம்பி பாச சென்டிமெண்டில் தந்திருக்கிறார்கள். நாயகன் ரிஷி ரித்விக்கை அவரது அக்கா வினோதினி போலீஸ் அதிகாரியாக்க விரும்புகிறார். தான் நடத்திவரும் சிறு ஓட்டல் தொழிலில் சொற்ப வருமானம் வந்தாலும் அதையும் தம்பியின் படிப்புக்கே செலவழிக்கிறார்.

தம்பி ரிஷி ரித்விக்கும் அக்காவின் ஆசையை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, இதய நோய் பாதிப்புக்குள்ளான வினோதினி மருத்துவ சிகிச்சையின் போது நடந்த மோசடியில் உயிரிழக்க, அதற்கு காரணமானவர்களை அழிக்க ரிஷி ரித்விக் களம் இறங்குகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?, அவரது அக்கா ஆசைப்பட்டது போல் அவர் போலீஸ் அதிகாரியானாரா?என்பது திகுதிகு திரைக்கதை.
நாயகனாக வரும் ரிஷி ரித்விக் நடிப்பில் அதிரடிக்கிறார். அக்கா பாசத்தில் உருகுகிறார். ஆபரேஷன் என்ற பெயரில் அக்காவை கொன்ற மருத்துவமனை நிர்வாகிகளிடம் அவர் எகிறிப் பாயும் இடம் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் அவரை உறுதிப்படுத்துகிறது. காதல் மற்றும் நடனக் காட்சிகளிலும் முழுமையான ஹீரோவாக பரிமளிக்கிறார்.
நாயகியாக, பெண் போலீசாக நடித்திருக்கும் ஆராத்யா ஆளும் அழகு. நடிப்பும் அழகு. நடனமும் அம்மணிக்கு நன்றாகவே வருகிறது. போலீஸ் நிலையத்தில் காதலன் அடிவாங்க, அதை தடுக்க மேலதிகாரியிடம் கெஞ்சு மிடத்தில் அந்த சோக நடிப்பிலும் மனதில் நிற்கிறார்.
நாயகனின் அக்காவாக வரும் வினோதினி வைத்தியநாதன், அனுபவ நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு ஜீவன் கொடுத்திருக்கிறார். சுகாதார அமைச்சர் கேரக்டரில் வில்ல அவதாரம் எடுத்திருக்கிறார் சித்தப்பு சரவணன். அவரது உதவியாளராக வரும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன், மருத்துவராக நடித்திருக்கும் ஆனந்த் பாபு, வில்லன்களாக சாய் தீனா, காமராஜ், செண்ட்ராயன் கேரக்டர் ரோடு இணைந்து சிறப்பு நடிப்பை தந்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனைத்து பாடல்களும் மனதில் நிற்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னணி இசை தெறிக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரோவின் பாஸ்கர், காட்சிகளை நெஞ்சுக்கு நெருக்கமாக படமாக்கி
யிருக்கிறார். பி.பாண்டுரங்கன் எழுதியிருக்கும் கதையை, கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக இயக்குநர் எம்.கஜேந்திரன் இயக்கியிருக்கிறார்.
காதல், ஆக்‌ஷன், திருப்பங்கள் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய கதைக்கு விறுவிறுப்பு மூலம் வேகம் கூட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ‘குற்றம் தவிர்’ ரசிகர்கள் தவிர்க்க முடியாத படம். நாயகன் யார் என்று தெரிய வரும் அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.

Comments (0)
Add Comment