வில் — திரை விமர்சனம்

வில் என்ற ஆங்கில பதத்துக்கு தமிழில் உயில் என்று பெயர். பிரபல தொழிலதிபர் ஒருவர் பெண்ணொருத்திக்கு தனது ரூ. 2 கோடி மதிப்பிலான வீட்டை உயில் எழுதி வைத்திருக்கிறார். தற்போது அவர் உயிரோடு இல்லாத நிலையில் சொத்துக்களை தனது வாரிசுகளான இரண்டு மகன்களுக்கு சரிசமமாக பிரித்து உயில் எழுதி வைத்திருப்பதும், அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரூ. 2 கோடி மதிப்பி லான வீடு ஒன்றை மட்டும் ஒரு பெண்ணின் பெயருக்கு உயில் எழுதியிருப்பதும் அவரது இறப்புக்கு பின் வழக்கறிஞர் மூலம் குடும்பத்துக்கு தெரிய வர…

யார் என்றே தெரியாத பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மொத்த குடும்பமும் வேலை செய்கிறது. வேறு ஒரு பெண்ணை அந்தப் பெண்ணாக தயார் செய்து கோர்ட்டில் நிறுத்துகிறார்கள். அந்தப் பெண் போலி என கண்டுபிடிக்கும் நீதிபதி, பெரியவர் யாருக்கு தன் வீட்டை எழுதி வைத்தாரோ அந்தப் பெண்ணை கண்டுபிடித்து கோர்ட் டில் நிறுத்த ஹை கோர்ட் போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிடுகிறார்.

போலீஸ் அதிகாரி அந்த பெண்ணை கண்டுபிடித்து கோர்ட்டில் நிறுத்தினாரா? ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வைக்கும் அளவுக்கு அந்த பெண்ணுக்கும் பெரியவருக்குமான உறவு எத்தகையது என்பதை கொஞ்சம் சஸ்பென்ஸ் கொஞ்சமாய் திருப்பங்களுடன் தந்திருக்கிறார்கள்.

நீதிபதியாக வரும் சோனியா அகர்வாலுக்கு அந்த நீதிபதி கதாபாத்திரம் அளவெடுத்து தைத்த சட்டை போல அப்படிப் பொருந்திப் போகிறது. அவரும் நீதிபதி கதாபாத்திரத்திற்கு தனது நடிப்பால் கம்பீரம் சேர்த்து இருக்கிறார் நீதிமன்ற காட்சிகள், அதில் நடக்கும் விசாரணைகள் எல்லாமே நிஜத்தில் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்பதால், அந்த காட்சிகளுடன் சுலபத்தில் ஒன்ற முடிகிறது. அந்த விதத்தில் நீதிபதி கேரக்டரில் சோனியா அகர்வால் நிஜமாகவே மாஸ் காட்டி இருக்கிறார்.அவரது ஒவ்வொரு அசைவும் அந்த நீதிபதி கேரக்டரை நமக்குள் நிலை நிறுத்தி விடுகிறது.

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும் அலக்கியா, குடும்பம் பட்ட திடீர் கடன் ரூ. 7 லட்சம் புரட்ட அவர் படும் பாடு தேர்ந்த நடிகையாகவும் அவரை வெளிப்படுத்தி விடுகிறது.

தந்தை இழந்த மரியாதையை மீண்டும் பெற போராடும் மகளாகவும் நடிப்பில் கவனம் பெறுகிறார்.
சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விக்ராந்த், விசாரணை நடத்தும் இடங்கள் சிறப்பு.

தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்குப் புதியவர்கள் என்ற போதிலும் நடிப்பில் அடித்து ஆடுகிறார்கள்.

செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் டி.எஸ்.பிரசன்னாவின் கேமரா, நீதிமன்ற காட்சிகளை யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், தொழிலதிபரின் அன்பை சம்பாதித்த அந்தப் பெண் யார் என்ற கேள்வியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை உணர்வும் நெகிழ்வுமாய் கொடுத்திருக்கிறார்.

உயில் பின்னணியில் உள்ள அந்த சஸ்பென்ஸ் நிஜமாகவே எதிர்பாராதது. இந்த வில்லுக்கு வில் பவர் அதிகம்.

Comments (0)
Add Comment