வேடுவன் என்றால் வேட்டைக்காரன். ரகசிய போலீஸ் அதிகாரியான இந்த வேட்டைக்காரன் கண்ணா ரவிக்கு காவல்துறையின் என்கவுண்டர் லிஸ்டில் இருக்கும் ரவுடிகளை வேட்டையாடுவது அசைன்மென்ட்.
இந்தப் பட்டியலில் காவல்துறையால் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த தாதா ஒருவனை போட்டு தள்ளும் இந்த அதிகாரிக்கு அடுத்த அசைன்மென்ட் ஊருக்குள் பெரிய மனிதனாக உள்ளுக்குள் தாதாவாக வலம் வரும் சஞ்சீவை காலி பண்ணுவது.
இதற்காக அந்த தாதாவின் ஊருக்கு வந்து அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துக் கொண்டே அந்த தாதாவின் நடவடிக்கைகளை நோட்டமிடுகிறார்.
அப்போதுதான் அந்த தாதாவின் மனைவி தன் கல்லூரிக்கால தோழியின் கணவன் என்பது தெரிய வர… இப்போது நம் அதிகாரி கடமையை செய்தாரா… அல்லது நட்பு செண்டிமெண்டில் தடுமாறினாரா என்பதை கொஞ்சமும் விறுவி றுப்பு குறையாத காட்சிகள் மூலம் பரபரப்பு பந்தி வைத்திருக்கிறார்கள்
நட்பு சூழலில் பாச வலையால் பின்னப் பட்ட இந்த தாதாவின் பயோ பிக்கில் நடிக்கும் நடிகராக வருகிறார் கண்ணா ரவி.
தொடர்ந்து நான்கு படங்கள் பிளாப் ஆன நிலையில் இந்த நல்ல தாதாவின் பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு அமைகிறது. ரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் நல்ல தாதா சஞ்சீவியை என்கவுண்டர் செய்ய நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக இந்த பயோபிக்கில் அவர் நடிக்க…படப்பிடிப்பில் நடிப்பையும் தாண்டி சில சம்பவங்கள் அவரை பாதிக்கின்றன. தோழியின் கணவன் விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவு, அதனால் ஏற்படும் மன உளைச்சலை வெளிப்படுத்தும் இடங்கள் நடிப்பில் அத்தனை அழகு.
கன்னா ரவியின் மனைவியாக வரும் லாவண்யா மன உளைச்சலுக்கு உள்ளான கணவனை தாங்கி பிடிக்கும் இடங்களில் நடிப்பில் பிரகாசிக்கிறார்.
உலகுக்கு அவர் தாதா. காவல்துறை லிஸ்டில் அவர், களை எடுக்கப்பட்ட வேண்டியவர். இப்படி ஒரு கேரக்டரில் சஞ்சீவ் சமய சஞ்சீவியாக படத்தை தாங்கி பிடிக்கிறார். மனைவியின் கல்லூரி கால தோழனே தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீஸ் என்பது தெரிந்து கொள்ளும் இடத்தில் கண்ணா ரவியை சைலண்டாக எச்சரித்து ஊரை விட்டு போகச் சொல்லும் இடத்தில் அவரது தாதாயிச நடிப்பு நன்றாகவே வேலை செய்கிறது.
அவரது மனைவியாக வினிஷாதேவி நட்பின் இலக்கணமாக நெஞ்சுக்குள் நிற்கிறார். ஒரு சில காட்சிகளே என்ற போதிலும், ரேகா நாயர், ஐஸ்வர்யா ரகுபதி நடிப்பில் மிரட்டி விடுகிறார்கள்.
ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவும் விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் காட்சிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் பவன், ஒரு தாதாவின் என்கவுண்டர் பின்னணியில் உள்ள ஆசாபாசங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் தேர்ந்த இயக்குனராக தடம் பதிக்கிறார். தனது கல்லூரி கால நண்பன் தனது கணவரை கொல்ல வந்த ரகசிய போலீஸ் அதிகாரி என்பதை வினிஷா தேவி தெரிந்து கொண்ட பிறகு ஏற்படும் திருப்பம் படத்தின் ஜீவன்.
கதை புதுசு அது சொல்லப்பட்ட விதம் இன்னும் புதுசு. கடமைக்கும் நட்புக்குமான இந்த பாலம் கதையின் பலமும் கூட.
இந்தத் தொடர் ஜீ 5 இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.