கிராமத்தை சேர்ந்த தனுஷ், படித்து விட்டு வெளிநாட்டுக்கு செல்கிறார். அங்கு நல்ல வேலை கிடைப்பதோடு, தன் முதலாளி சத்யராஜின் நம்பிக்கையையும் பெறுகிறார். கடின உழைப்பால் நிறுவனமும் வளர்கிறது. தனுஷின் இந்த உழைப்பு
சத்யராஜ் தனது மகள் ஷாலினி பாண்டேவை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் அளவுக்கு போகிறது. நிச்சயதார்த்தம் நடக்கிறது. ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்த நிலையில் ஊரிலிருந்து தந்தை இறந்த செய்தி தனுஷுக்கு கிடைக்கிறது.
திருமணத்துக்கு தேதி குறித்து விட்ட நிலையில், தந்தையின் இறுதி காரியம் முடிந்ததும் புறப்பட்டு வர கேட்டுக்கொள்கிறார் சத்யராஜ்.
ஆனால் அவரால் ஊரிலிருந்து மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல முடியாத சூழல் உருவாவதோடு, தனது தந்தை நடத்தி வந்த இட்லி கடையை தொடர்ந்து நடத்த முடிவு செய்கிறார். இது தெரிய வந்து மணப்பெண்ணின் அண்ணன் அருண் விஜய் அந்த கிராமத்துக்கே வந்து தனுஷை தாக்குகிறார். பதிலுக்கு தனுஷும் தாக்க… அதன் பிறகு என்ன நடந்தது… திருமணம் நடந்ததா? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘இட்லி கடை’.
வெளிநாட்டில் கோட் சூட் போட்டு கம்பீரமாக வலம் வரும் தனுஷ், கிராமத்தில் வேட்டி சட்டை, தோளில் துண்டு என்று கிராமத்து இளைஞனாக அப்படியே மாறிப் போகிறார். தந்தையின் இறப்புக்கு பிறகு கிராமத்தில் அவரது ஒவ்வொரு செயல்பாடும் எளிமையும் இனிமையுமானவை. கிராமத்தில் தனது பள்ளிக்கால சினேகிதி நித்யா மேனனை அணுகும் ஒவ்வொரு இடங்களிலும் நடிப்பில் அத்தனை இயல்பு.
தனுஷின் தந்தையாக நடித்திருக்கும் ராஜ்கிரண், அகிம்சையே ஆயுதம் என்று மகனுக்கு போதிக்கும் இடத்தில் கவனம் பெறுகிறார்.
கிராமத்து நாயகியாக வரும் நித்யா மேனன், கனமான நடிப்பில் கனமான தோற்றத்தை மறக்க வைக்கிறார். பள்ளிக்கால நண்பன் தனுஷின் மனசுக்குள் நாம் இன்னும் இருக்கிறோமா என்பதை கண்டுபிடிக்க, பள்ளிக்காலத்தில் அவர் வாங்கித் தந்த முத்து மாலை சம்பவத்தை நினைவூட்டும் இடம் ரசனையானது.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டே நடிப்பிலும் குறையில்லை.
தொழிலதிபராக நடித்திருக்கும் சத்யராஜ், தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது அனுபவ நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
அவரது மகனாக வரும் அருண் விஜய் நடிப்பில் புயலின் சீற்றம். ஏற்கனவே தங்கையின் வருங்கால கணவராக தனுஷை ஏற்கத்தயங்கியவர், ஊரோடு தங்கிவிட்ட தனுஷை பழிவாங்க துடிக்கும் இடங்களில் ஆவேச நடிப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறார்.
ஏரியா இன்ஸ்பெக்டராக பார்த்திபன் தனது அலம்பல் நடிப்பின் மூலம் அசத்துகிறார். சமுத்திரக்கனி உள்ளூர் சண்டியராக கெத்து காட்டுகிறார்.
கிட்டத்தட்ட தனுஷூ டனேயே பயணிக்கும் கேரக்டர் இளவரசுக்கு. அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். தனுஷின் அம்மாவாக கீதா கைலாசம் சில காட்சிகளே என்றாலும் நிறைவு.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கற்கண்டின் இனிமை.
ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் கிராமத்தையும், வெளிநாட்டையும் அழகுற காட்சிப்படுத்தி இருக்கிறார்.
நடிப்போடு எழுதி இயக்கவும் செய்திருக்கிறார் தனுஷ். கிராமத்து இட்லி கடை பின்னணியில் மண் மணமிக்க கதையை உணர்வுகளை தட்டி எழுப்பும் விதத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். தன் கேரக்டரை விட அருண் விஜய் கேரக்டருக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் தேர்ந்த இயக்குனராகவும் அவரை வெளிப்படுத்துகிறது.
அகிம்சையே சிறந்த ஆயுதம் என்ற தனது தந்தையின் தாரக மந்திரத்தை போகிற போக்கில் சொல்லாமல் கதை நெடுக அதை முன்னிலைப்படுத்தி இருப்பது சிறப்பு. அப்படியே தங்கள் சுயநலத்துக்காக பெற்றவர்களை தனியாக விட்டுப் போகும் பிள்ளைகளுக்கும் சூடு கொடுத்து இருக்கிறார்.
மொத்தத்தில், சூடும் சுவையுமான இந்த இட்லியில் சுவை அதிகம்.