இறுதி முயற்சி — திரை விமர்சனம்

கோவையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளராக இருந்து நொடித்துப் போனவர் ரஞ்சித். கடையை விருத்தி செய்வதற்காக கந்துவட்டிக்கார கும்பலிடம் ரூ 80 லட்சம் வட்டிக்கு வாங்குகிறார். வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டியும் இன்னும் ஒரு கோடி ரூபாய் கட்ட வேண்டும் என்கிறது கந்துவட்டி கும்பல். அதற்காக வீட்டுக்கே வந்து அந்த கும்பல் மிரட்டவும் செய்கிறார்கள். மேலும் மேலும் வட்டி பணம் கட்டி மேற்கொண்டு முதல் இல்லாமல் கடையை மூட வேண்டியதாகிறது.
இதன் பிறகு கந்து
வட்டி கும்பல் தொல்லை இன்னும் அதிகமாகிறது. அவரது குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, கடனை வசூலிக்க அவர்களை பலவழிகளில் துன்புறுத்துகிறார்கள். இதில் உச்சகட்டமாக வட்டிக்கீடாக மனைவியையும் மகளையும் கடத்தி போய் விடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்.
கடன் பிரச்சனையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் ரஞ்சித்துக்கு கடன் கேட்டு போகிற இடமெல்லாம் அவமானமே மிஞ்சுகிறது. உயிர் நண்பர்கள் கூட உதாசீனம் செய்கிறார்கள். இதற்கிடையே, சென்னையில் தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளி ஒருவன், போலீசிடம் இருந்து தப்பி ரஞ்சித்தின் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருக்கிறான்.
இந்த நிலையில், கந்துவட்டி மாஃபியாவின் தொல்லை நாளுக்கு நாள்
கூடிக்கொண்டே போக , பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக ரஞ்சித் இறுதியாக ஒரு விபரீத முயற்சியை மேற்கொள்கிறார். அது என்ன ? அதன் மூலம் அவரது பிரச்சனை தீர்ந்ததா? இல்லையா ? , அவரது வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சைக்கோ கொலையாளி யார் ? என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக ரஞ்சித். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப் பிரவேசம் செய்து இருந்தாலும் அவருக்கே உரிய நடிப்புச் சிறப்பில் அந்த கேரக்டரை அழகாக உள்வாங்கி திரை நிரப்பி விடுகிறார். கடன் பிரச்சனையால் நிம்மதி இழந்து தவிக்கும் குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கந்து வட்டி கும்பலிடம் எந்த நேரத்தில் மனைவியையும் மகளையும் பறி கொடுப்போமோ என்கிற பதட்டம் அவரது உடல் மொழியில் அற்புதமாக வெளிப்படுகிறது. ஒரு பக்கம் கடனை அடைக்க பணம் புரட்ட முயற்சிப்பது, மறுபக்கம் குடும்பத்தின் நிலை எண்ணி கண்ணீர் வடிப்பது என்று காட்சிக்கு காட்சி வாழ்ந்து கெட்ட அந்த குடும்பத் தலைவன் கேரக்டரில் நிறை குட மாக நிரம்பி வழிகிறார்.
ரஞ்சித்தின் மனைவியாக நடித்திருக்கும் மெஹாலி மீனாட்சி, மன உளைச்சலில் துவண்டு போன கணவருக்கு ஆறுதல் சொல்லும் இடத்திலும், கந்துவட்டி கும்பலால் எந்த நேரத்திலும் தனக்கும் மகளுக்கும் விபரீதம் நேருமோ என உள்ளூர கலங்கும் இடத்திலும் நடிப்பில் தனி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.

ஈவிரக்கம் இல்லாத கந்துவட்டி தாதாவாக விட்டல் ராவ், அவரது தம்பியாக புதுப்பேட்டை சுரேஷ், குற்றவியல் ஆய்வாளராக கதிரவன், ரஞ்சித்தின் மகளாக
மெளனிகா, மகனாக நீலேஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதைக் கேற்ற நடிப்பை தந்து இருக்கிறார்கள்
இசையமைப்பாளர் சுனில் லாசரின் பாடல்களும் பின்னணி இசையும் கனமான இந்த கதையை மேலும் கனமாக்கி விடுகின்றன.
ஒளிப்பதிவாளர் சூர்யகாந்தியின் கேமரா கதையின் மென் சோகத்தை
நமக்குள் கடத்தி விடுகிறது.
ஒரு குடும்பத்தின் மனப் போராட்டம் சொல்கிற கதையை முடிந்தவரை இயல்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர்.
வெங்கட் ஜனா.
கந்துவட்டி கொடுமைகளின் பின்னணியை தோலுரித்து காட்ட முயற்சித்திருக்கிறார்
மெதுவாக நகரும் திரைக்கதை கூட கம்யூனிச போராளி கேரக்டர் தரும்
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் பரபரப்பை கூட்டி விடுகிறது.
இறுதி முயற்சி என்றாலும் இப்போதைக்கு தேவையான முயற்சி.

Comments (0)
Add Comment