ராணிப்பேட்டை அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மனைவி, மகன் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்,விவசாயி கன்னியப்பன். ( விதார்த் ). திடீரென ஒருநாள் வாங்காத கடனுக்காக, அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது.
கடன் வாங்காத கன்னியப்பன் அதிர்ந்து வங்கியில் போய் நியாயம் கேட்க…
இது உங்க அப்பா வாங்கின கடன். 6 மாதம் ஒழுங்கா வட்டி கட்டினவர் அப்புறமா கட்டாமல் விட்டு விட்டார். அதனால் முறைப்படி ஏலம் விட்டு விட்டோம் என்று கூலாக சொல்கிறார்கள். இதைத்தொடர்ந்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் புகார் கிடப்பில் போடப் படுகிறது.
இதன் பிறகே இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்பதை உணரும் கன்னியப்பன், நிலத்தை மீட்டாக களமிறங்குகிறார். அந்த முயற்சியில் அவர் வென்றாரா? என்பதை நீதிக்கான போராட்டமாக சொல்லியிருக்கிறார்கள்.
விவசாயி கன்னியப்பனாக விதார்த், அந்த கேரக்டரோடு ஒன்றிப் போகிறார். தனது விவசாய நிலத்தை மோசடி மூலம் அபகரித்த வங்கிக்குள் புகுந்து ஆவேசமாய் கத்தி கூச்சலிடும் இடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி கன்னியப்பனாகவே அவரை உணர முடிகிறது. வசனங்கள் இல்லாமலே தன் முகபாவத்தாலும் உடல்மொழியாலும் அவர் வெளிப்படுத்தும் உணர்வுகள் அந்த கேரக்டரின் கனத்தை கூட்டி விடுகின்றன. நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு அவர் விடும் அந்த இரண்டு சொட்டு கண்ணீர் அவரது நடிப்பை விருது வரை கொண்டு சேர்க்கும்.
நாயகியாக வரும் ரக்ஷனா கணவரின் பொறுப்புணர்ந்து செயல்படும் மனைவியாக நடிப்பில் டிஸ்டிங் க்ஷன் வாங்குகிறார்.
அருள்தாஸின் வேடம் கிராமத்து மனிதர்களின் யதா ர்த்த வார்ப்பு.
வழக்கமாகச் சிரிக்க வைக்கும் மாறன், இதில் சிரிக்க வைத்துவிட்டு கடைசியில் கண்கலங்கவும் வைத்து விட்டார்.( இவரது கேரக்டரை இன்னும் கூட விரிவுபடுத்தி இருக்கலாம் )
இயக்குநர்கள் சரவண சுப்பையா, தினந்தோறும் நாகராஜ் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் வந்து சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்களில் மண் மணக்கிறது. பின்னணி இசை கதையின் கனத்தை நமக்குள் கடத்தி விடுகிறது.
அருள் கே.சோமசுந்தரம் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி.
இயக்குநர் வி.கஜேந்திரன், விவசாயிகளுக்கு நடக்கும் மோசடிகளை தோலுரித்து காட்டியிருப்பதோடு அதற்கு நல்லதொரு தீர்வும் சொல்லியிருக்கிறார். மருதம், அமுதம்.