பார்த்த காதல் பார்க்காத காதல் தொடங்கி அப்பாவி காதல், அடப்பாவி காதல் வரை திகட்ட திகட்ட சொல்லி விட்டார்கள்.
அவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு இந்த படம் ஒரு நாயகனின் ஆவிக் காதல். அவன் இருக்கிறான் உயிரோடு. அவன் காதலியோ விபத்தில் சிக்கி உயிரிழந்தவள்.
அந்தக் காதலியை அதாவது ஆவியை ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கிறான் நாயகன்.
இது எப்படி சாத்தியம் என்பவர்களுக்காக இப்போது கதைக்கு வருவோம்.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அந்தநேரத்தில் அவருடைய முகநூல் பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், உங்களை நேசிப்பவர்கள் அனேகர் இருக்கிறார்கள். எனவே தயவு செய்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். என்று இருக்க…
அதிர்ச்சியடையும் நாயகனுக்கு கூடவே இன்னொரு அதிர்ச்சி, செய்தி அனுப்பிய பெண் இறந்து இரண்டு மாதங்களாகிறது என்பது தான்.
இறந்தவர் எப்படி செய்தி அனுப்ப முடியும்? என்று தேடிப்போனால் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் நாயகனுக்கு கிடைக்கின்றன.
அவை என்னென்ன? அதன்பின் என்னவெல்லாம் நடந்தன என்பதை கொஞ்சமும் பரபரப்பு குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்.
நிஜமாகவே வித்தியாசமான வேடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு. அதில் வேண்டிய நடிப்பை நிறைவாக தந்து இருக்கிறார். இறந்த பெண் தனக்கே தெரியாமல் தன்னை ஒருதலை யாக நேசித்தவள் என்பதை தெரிந்து கொண்டு அந்தப் பெண்ணின் அன்புக்கு தன்னை உரியவனாக்கிக் கொள்ளும் இடம் வரை அந்த கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார்.
ஏமாற்றிய காதலியாக, பின்பு நாயகன் குடும்பத்துக்கு உதவும் நல்ல சிநேகிதியாக மனிஷாஸ்ரீ நடித்திருக்கிறார்.
இன்னொரு நாயகியாக பாத்திமா, நாயகனை நினைத்து உருகும் காட்சியில் மனம் பதி கிறார்.
தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் குறைவான காட்சிகளிலும் நிறைவான நடிப்பை தந்து போகிறார்.
நாயகனின் அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ஆவி மருமகளுக்காக வளைந்து போகும் இடங்கள் தேர்ந்த நடிகைகள் பட்டியலில் அவரை கொண்டு சேர்க்கிறது.
ஜீவா ரவி, லிவிங்ஸ்டன் கதை மாந்தர்களாக வந்து போகிறார்கள்.
பால்கணேசன் கேமரா கிராமத்து அழகுகளை மண் வாசனை மாறாமல் காட்சிப் படுத்தி இருக்கிறது.
அபுபக்கர் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையின் கனத்தை கூட்ட உதவுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் ரமேஷ் இலங்கமணி, ஆவி தொடர்பான கதைக்குள் அழகான காதலைச் சொல்ல முயன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே வேறு லெவல்.மொத்த படத்தையும் தாங்கி பிடிப்பதும் அதுவே தான்.