நாயகன் உதய் தீப், தனது தந்தையை தன் இரண்டு மாமன்கள் தான் கொலை செய்ததாக நினைத்து அவர்கள் மீது கோபமாக இருக்கிறார். அதே சமயம், ஒரு மாமன் மகளை காதலிக்கவும் செய்கிறார்.
இதற்கிடையே, அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்.
துக்க வீட்டில் அசதியில் அனைவரும் தூங்கி விட, பிணம் காணாமல் போகிறது. காணாமல் போன பிணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்குகிறது.
குடும்ப உறுப்பினர்களிடம் போலீஸார் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், நாயகனின் மற்றொரு மாமனும் இறந்து விடுகிறார். இந்த தொடர் மரணங்களின் பின்னணி மற்றும் காணாமல் போன பிணம் என்ன ஆனது, என்பதை பிளாக் காமெடி ஜானரில் சொல்கிறது படம்.
நாயகனாக நடித்திருக்கும் உதய் தீப், வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் சுறுசுறுப்பாக வருகிறார். மாமா மகளுடனான காதலில் தீவிரமாக இருந்து கொண்டே மாமாவுக்கு எதிரான மன நிலையில் இருக்கும் அந்த கேரக்டரை இயல்பாக செய்து இருக்கிறார்.
மாமன் மகளாக கவிதா சுரேஷ் அழகான இளம் வரவு. நடிப்பிலும் பழு தில்லை.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் பாலா, பொறுப்பான போலீஸ் அதிகாரியை கண்முன் நடத்துகிறார்.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன்- விஜே ரகுராம் பின்னணி இசை கதைக்களத்தோடு இணைந்து பயணிக்கிறது
ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாச்சலம் இயல்பான காட்சி அமைப்பில் கதைக் களத்துக்குள் நம்மையும் கொண்டு போய் விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஆண்டனி அஜித், பிணக் கடத்தல் சம்பவத்தை வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் குறையாமல் படத்தைக் கொண்டு போகிறார்.
காணாமல் போன பிணத்தை கடத்திப் போனது யார் என்பது தெரிய வரும் இடத்தில் நாயகனின் மாமா குடும்பத்தின் ரியாக்சன் நமக்குள்ளும் கடத்தப்படுகிறது. அந்தக் கடத்தல் பின்னணியிலான சமூக அக்கறை மெய்ச்சத் தக்கது.
மொத்தத்தில், ‘சாவீ’ போதைக்கு எதிரான எச்சரிக்கை மணி.