மாய பிம்பம் — திரை விமர்சனம்

காதலின் மேன்மை பற்றி பல படங்கள் வந்து விட்டாலும் அவற்றோடு அணிவகுக்காமல் தனித்து நிற்கிறது இந்த படம்.
உண்மைக் காதலர்களுக்கு இந்த படம் சமர்ப்பணமும் கூட.

மருத்துவக் கல்லூரி மாணவரான ஜீவா , பேருந்து பயணத்தின் போது தற்செயலாக சந்திக்கும் சுமதியால் ஈர்க்கப்படுகிறார். அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது விபத்துக்குள்ளாகிறார்.
ஆனால், அந்த விபத்தே இருவரையும் மீண்டும் சந்திக்க வைப்பதோடு அவர்கள் பழகுவதற்கும் வாய்ப்பு தருகிறது.
ஆனால் நாயகனின் நண்பர்களோ, ‘அது காதல் அல்ல இளமையின் வேகம். எதற்கும் ஒரு முறை அவளை வெளியூர் அழைத்துப் போய், தனிமை நெருக்கத்தில் அது உடல் தேவைக்கான காதலா என்பதை உறுதி செய்துவிடு’ என்கிறார்கள்.

ஜீவா அந்த பெண் சுமதியை வெளியூர் கோயிலுக்கு அழைக்க, கொஞ்சமும் தயங்காமல் அவனுடன் பயணப்படுகிறாள் அவள். அங்கே நண்பனின் அறையில் கிடைத்த தனிமையில் அவன் மோகத்துக்குள்ளாகி அவளை ஆக்ரமிக்க முயல…
அப்போதுதான் விபரீதம் உணரும் சுமதிக்கு தன் மீது ஜீவாவுக்கு இருப்பது காதல் அல்ல காமம் என்பது மண்டையில் உறைக்க… அவளுக்குள் ஆவேசம் தீப் பிடிக்கிறது. அவனைத் தள்ளிவிட்டு அங்கிருந்து அழுது கொண்டே கிளம்பி விடுகிறாள்.
இதற்குப் பிறகே அவள் தன்னை உயிராக நேசித்ததும், நண்பர்களின் தவறான வழி நடத்துதலால், தான் தடுமாறி தடம் மாறியது ஜீவாவுக்கு புரிகிறது.
அதன் பிறகு மன்னிப்பு கேட்டு தன் காதலை தெரிவிக்க சுமதியை தேடும் ஜீவாவுக்கு அவள் கிடைத்தாளா? காதலை சொன்னானா? என்பது உருக்கமான, அதே நேரம் மனதுக்கு நெருக்கமான கிளைமாக்ஸ்.

ஜீவாவாக ஆகாஷ். அறிமுகம் என்ற வார்த்தை தேவையில்லாத அளவுக்கு நடிப்பில் அத்தனை இயல்பாக மனதில் பதிந்து
போகிறார். பஸ்ஸில் தன் ஆதர்ச நாயகியை எதிர்பாராமல் சந்தித்ததில் தொடங்கி முடிவுவரை நடிப்பில் அத்தனை இயல்பு. தன்னால் நேசிக்கப்பட்ட பெண், தன்னை விடவும் அதிகமாய் தன்னை நேசித்தாள் என்பதை தெரிந்து கொள்ளும் அந்த கிளைமாக்ஸ் நடிப்பு கண்களில் அருவியை உற்பத்தி செய்து விடுகிறது. மொத்த குடும்பமும் தன்னை புறக்கணிக்கிறது என்பதை நண்பனிடம் போனில் கொட்டித் தீர்க்கும் இடத்தில் அறிமுக நடிகரா இவர் என்ற ஆச்சரியம் நமக்குள் எட்டிப் பார்ப்பது நிஜம்.

சுமதி என்ற கதாபாத்திரத்தில் கதையின் rநாயகியாக நடித்திருக்கும் ஜானகி, பக்கத்து வீட்டு பெண் போல அத்தனை எளிமை. அத்தனை பாந்தம். திருத்தமான முகம், தேர்ந்த நடிப்பு என அழகும் நடிப்பும் இணைந்த கலவை இவர். பல காட்சிகளில் வசனமே தேவைப்படாமல் இவரது கரிய பெரிய கண்களே நடித்து விடுகிறது. தன்னால் உயிராக நேசிக்கப்பட்டவன் தன் காதலை காமமாக கையாளத் தொடங்கிய இடத்தில் அச்சமும் அசூயையும் அருவருப்புமாய் அங்கிருந்து நடையை கட்டும் இடத்தில், மொத்த அவமானத்தையும் முகத்தில் தேக்கி
குமுறி அழுகிறாரே, அந்த இடத்தில் நிஜமாகவே நடிப்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் பொருத்தமான பாத்திரத் தேர்வில் மனதுக்குள் நிரம்பி விடுகிறார்கள். எல்லா பெண்களையுமே இயல்பாக ஏமாற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்ட நண்பனாக வரும் ஹரி ருத்ரன் கலகலப்பான நடிப்பால் கூடுதலாக மனதில் இடம் பிடித்து விடுகிறார். நாயகனின் பெற்றோராக, அண்ணன், அண்ணியாக, அவர்களின் குட்டிப் பெண்ணாக என
அத்தனை பேருமே நடிப்புக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
யப்பா…இப்படி ஒரு இயல்பான குடும்பத்தை
திரையில் பார்த்து எத்தனை நாளாச்சு…
நாயகியின் தோழியாக வருபவருக்கு பிற்பகு தியில் நடிக்க வாய்ப்பு அதிகம். அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எட்வின் சகாயின் ஒளிப்பதிவு கடலூர் சிதம்பரம் என்று அழகாக பயணப் படுகிறது.

நந்தாவின் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையோ கதை மாந்தர்களின் உணர்வை நமக்குள் நமக்குள் சுலபத்தில் கடத்தி விடுகிறது.

காதல் கதையாக இருந்தாலும், அதை புதிய கண்ணோட்டத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் கே.ஜே. சுரேந்தரை ரெட் கார்ப்பெட் விரித்து வரவேற்கலாம். காதல் என்பது உணர்வுகளின் சங்கமம். உணர்ச்சிகளின் சங்கமம் அல்ல என்பதை காட்சி வழியே அவர் திரைப்படுத்தி இருப்பது நிஜமான காதலுக்கு மரியாதை.
நாயகியின் குடும்ப பின்னணியை வாசலில் கிடக்கும் ஒரு ஜோடி செருப்பு மூலம் இனம் காட்டும் இடத்தில் முத்திரை இயக்கம்.
மொத்தத்தில் இந்த மாய பிம்பம்
காதலுக்கு புதிய கம்ப சூத்திரம்.

Comments (0)
Add Comment