திரௌபதி 2 திரை விமர்சனம்

14ஆம் நூற்றாண்டில் நடந்த இஸ்லாமிய படையெடுப்புக்கு பின் இந்தியாவில் நடந்த விஷயங்களை கற்பனை கலந்து சொல்வதே `திரௌபதி 2′.

கதை இன்றைய காலகட்டத்தில் தொடங்குகிறது.
ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட் ரிஷி) வக்பு வாரியத்தால் நில உரிமையாளர்கள் பாதிக்கப்படுவது குறித்து போராட முன் வருகிறார். இந்த பிரச்சனையை சரி செய்ய அடுத்தடுத்த நகர்வுகளில் ஒரு தேவைக்காக வெளிநாட்டில் இருந்து நாயகியும் அவள் தங்கையும் வருகிறார்கள். வந்த இடத்தில்
14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தற்போது பாழடைந்த நிலையில் இருக்கும் பழங்கால கோயில் ஒன்று நாயகி கண்ணில் பட,
அதே நேரம் நாயகிக்கு பழைய நினைவுகள் அதாவது 14-ம் நூற்றாண்டு கால நினைவுகள் மனதில் வட்டமடிக்க, அன்றைய தனது கணவன் வீரசிம்ம காடவராயன் தான் இன்றைய ருத்ர பிரபாகரன் என்றும், தான் அவரது அன்றைய மனைவி என்பதும் தெரிய வருகிறது.
அப்போது கடந்த கால தனது செயலுக்காக நாயகனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறாள் நாயகி.

இப்போது கதை
14ஆம் நூற்றாண்டுக்கு போகிறது. அப்போது டெல்லியை கைப்பற்றி ஆண்ட முகமது பின் துக்ளக் (சிராக் ஜானி) இந்தியாவில் உள்ள இந்துக்களை, இஸ்லாமியத்துக்கு மதம் மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். அதோடு கடுமையாக வரியும் விதிக்கிறார். வரியை கட்டாதவர்களுக்கு அல்லது கட்ட முடியாதவர்களுக்கு அவர் அளிக்கும் ஒரே சலுகை, தங்கள் மதத்துக்கு அவர்கள் மாறுவது.
அவர் மிரட்டலில் பணியாதவர்களை அவரது போர் வீரர்கள் தரும் கொடூர சித்ரவதை மாற்றுகிறது.
அதற்கும் மாறாதவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள். பெண்களாக இருந்தால்
பலாத்காரம்… உயிர் பறிப்பு என்று கொடுமை நீடிக்கிறது.
இந்தக் கட்டாய மதமாற்றத்தை
எதிர்த்து நிற்கிறார் வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்). அவரின் விசுவாசப் படையான கருடப் படையில் தளபதியாக இருக்கிறார் வீரசிம்ம காடவராயன்.
ஒரு கட்டத்தில் வல்லாள மகாராஜா முக்கியமான பொறுப்பு ஒன்றை காடவராயனுக்கு கொடுக்கிறார். அதை நிறைவேற்றும் முயற்சியில் பல சவால்களை எதிர்கொள்கிறார். தடைகளை தாண்டி அந்த பொறுப்பை அவரால் நிறைவேற்ற முடிந்ததா?
துக்ளக்கின் கொடூரங்களுக்கு முடிவு எட்டப்பட்டதா என்பதை பதை பதைப்புடன் கூடிய திரைக்கதை விவரிக்கிறது
வல்லாள மன்னரின் விசுவாச தளபதியாக வரும் ரிச்சர்ட் ரிஷி அந்த கேரக்டருக்குள் தன்னை முழுமையாக பொருத்திக் கொள்கிறார். மன்னரின் விசுவாசப் பிரதிநிதியாக, அவர் கட்டளையை தயக்கம் இன்றி
சிரமேற்கொள்ளும் எல்லா இடத்திலுமே பிரதானமாய் நிற்கும் அந்த விசுவாசம் அந்த கேரக்டரோடு நம்மை பிணைத்துக் கொள்கிறது. அடிதடி காட்சிகளில் ஒரு தளபதிக்கே உரிய வீரம் திரை நிரப்பி விடுகிறது.

அவரது மனைவியாக திரெளபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்‌ஷனா இந்துசூடன், கம்பீரமான தோற்றம், புன்னகை முகம் என்று தன் கேரக்டருக்கு தனி கம்பீரம் சேர்க்கிறார். வீரமிக்க பெண் கதாபாத்திரத்தை தன் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அழகாக நமக்குள் கடத்தி விடுகிறார்.
அரசராக வரும் நட்டி தேசப்பற்று மிக்க அரசர்கள் வரிசையில் தன்னை நிலை நாட்டி விடுகிறார். ( வசனங்களை மட்டும் சற்று நிதானமாக உச்சரித்து இருக்கலாம்,)
துக்ளக் மன்னனாக வரும்
சிராக் ஜானி வழக்கமான ஒரு வில்லன். அவ்வளவே.
முகமது பின் துக்ளக்கின் மனைவியாக நடித்திருக்கும் தேவயானி சர்மா, சம்புவராயர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வேல. ராமூர்த்தி, பரணி, ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, அருணோதயன் லக்‌ஷ்மணன் வரலாற்று பாத்திரப்படைப்பில் இணைந்து கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள். .

ஒளிப்பதிவாளர் பிலிப் ராஜ் சுந்தரின் கேமரா வரலாற்று காட்சிகளை மனதில் ஓவியமாய் தடம் பதிக்கிறது.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகராகம். குறிப்பாக அந்த எம் கோனே பாட்டு மனதை மயிலிறகால் வருடிய சுகம்.
எஸ்.தேவராஜின் படத்தொகுப்பு, கமலநாதனின் கலை இயக்கம் படத்தின் கூடுதல் சிறப்பு.
மோகன்.ஜி இயக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் முகலாயர்களின்
படையெடுப்பு முறியடிக்கப்பட்டதையும், அதன் பின்னணி யில் இருக்கும் வல்லாள மகாராஜா பற்றியும் திரைப்
படுத்திய இயக்குநர் மோகன்.ஜி,
முகலாயர்கள் இந்துக்கள் மீது நடத்திய கொடூரங்களையும் இதயம் குமுறும்
விதத்தில் சொல்லி இருக்கிறார். துக்ளக் அண்ட் கோ பெண்கள் மீது
அதிக நாட்டம் கொண்டவர்கள் என்பதை திரும்பத் திரும்ப காட்டி இருக்க வேண்டாம்.
கணவன் தனது ராணுவ கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்று தவறாக புரிந்து கொள்ளும் மனைவி, பெற்ற குழந்தையை கூட அவள் கண்ணில் காட்ட மறுக்கிறாள் என்னும் இடத்தில் தேசப்பற்றே மேலோங்கி நிற்பது இயக்குனருக்கான மகுடம்.

மதிப்பெண்5.5/ 10.
Comments (0)
Add Comment