லாக் டவுன் — திரை விமர்சனம்

கொரோனா காலகட்டத்தில் நடந்த உண்மைக் கதையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லி இருக்கிறார்கள்.
2020 கால கட்டத்தில் பெருந்தொற்று காரணமாக, அதற்குமுன் கற்பனை செய்துகூடப் பார்த்திராத வகையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்ததை யார் தான் மறக்கக்கூடும்?

கொடுமையான அந்த காலகட்டத்தில் தவிப்பும் துடிப்புமான ஒரு பெண்ணின் மனப் போராட்டத்தை நெஞ்சம் நெக்குருக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்படி என்ன போராட்டம் அந்த பெண்ணுக்கு? அதற்கு கதைச் சுருக்கம் சொல்ல வேண்டும்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகி அனுபமா பரமேஸ்வரன், வேலையின் பொருட்டு தோழியின் அழைப்பை ஏற்று ஒரு விருந்து கொண்டாட்டத்தில் பங்கெடுக்கிறார்.
அந்த விழாவில் வேலை உறுதி செய்யப்பட்ட மகிழ்ச்சியில் மது குடிக்க வேண்டிய கட்டாயம் நேர்கிறது. மது மயக்கத்தில்
இருந்தவரை அங்குள்ள ஒரு அறையில் தங்க வைக்கிறார்கள். அங்கு தான் அவருக்குத் தெரியாமலேயே நடந்து முடிகிறது பாலியல் பலாத்காரம்.
இரண்டு மாதம் கழித்து தான் கர்ப்பமுற்றது தெரிந்து அதிர்ந்து போகிறார். பெற்றோருக்குத் தெரியாமல் கருவை கலைத்துவிட முடிவெடுக்கும் நாளில் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுகிறது.
அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? கருவை கலைக்க முடிந்ததா? நடந்த உண்மை பெற்றோருக்கு தெரிந்ததா? என்பதை விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் தனது கேரக்டரை உள்வாங்கி நடித்ததில் அந்த கேரக்டராகவே மாறிப் போய் இருக்கிறார்.
கொரோனாவின் போது கருவை கலைக்க தனது தோழியுடன் டாக்டர் டாக்டராக பார்த்து அவமானப் படும் போடும் இடங்களில் மனசை பிழிந்து விடுகிறார். எப்படி கர்ப்பம் தரித்தோம் என்று தெரியாமலும் அதிலிருந்து வெளியே வர முடியாமல் ஏற்பட்ட தடைகளினாலும் தவித்துப் போகும் காட்சிகளில் அந்தத் தவிப்பை நடிப்பால் பார்வையாளர்களுக்கும் கடத்தி விடுகிறார். அம்மணிக்கு விருது நிச்சயம்.

நாயகியின் பெற்றோராக வரும் சார்லி -நிரோஷா நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் பெற்றோராக நடிப்பில் பளிச்
சிடுகிறார்கள்.

பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா என படத்தில் நிறையப் பேர். அத்தனை பேரும் தங்கள் கேரக் டர்களில் நின்று
நிலைக்கிறார்கள்.
கொரோனா கால கட்டத்தின் அபாய சந்து பொந்துகள் வரை துல்லியமாக படம் பிடித்திருக்கிறது
கே.ஏ.சக்திவேலின் கேமரா.

என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். காட்சிகளுக்கு பொருத்தமான கனமான பாடல்கள் மனதில் தேங்கி விடுகின்றன. பின்னணி இசை நாயகியின் ஒவ்வொரு நாள் தவிப்பையும் இம்மி பிசகாமல் நமக்குள் இடப் பெயர்ச்சி செய்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா.இந்தக் கதையில் வரும் நாயகியின் வாழ்வா சாவா பிரச்சனை மட்டுமின்றி ஊரடங்கு காலத்தில் மக்களின் இக்கட்டான நிலையையும் கதைக்களத்தில் அழகுற இணைத்துக் கொண்டிருக்கிறார்.
நாயகியின் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்ற பெரும் கேள்விக்கான பதிலையும் தாண்டி நாயகியின் கருக்கலைப்பு போராட்ட சிக்கலில் இருந்து மீண்டால் போதும் என்று பார்வையாளனை எண்ண வைத்து விடுகிறது திரைக்கதை. அதுவே படத்தின் வெற்றியாகவும் மாறிவிடுகிறது.

லாக் டவுன், கதை சொன்ன விதத்தில் மனசுக்குள் பிரேக் டவுன்.

Comments (0)
Add Comment