ரெட் லேபிள்– திரை விமர்சனம்

கல்லூரியில் படித்த காலகட்டத்தில் அடிதடி, போலீஸ் வழக்கு என்று இருந்த நாயகன் லெனின், கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அனைத்தையும் விட்டுவிட்டு, தான் உண்டு தன் தொழில் உண்டு என்று வாழ்ந்து வருகிறார்.

இந் நிலையில், மீண்டும் தனது கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள் தலைவர் தேர்தலில் இடைப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். அதற்காக மீண்டும் கல்லூரிக்குள் வரும் லெனின், கல்லூரி வளாகத்திற்குள் ஒரு கொலைக்கு காரணம் ஆகி விடுகிறார்

ஏற்கனவே அவர் மீது சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகி விடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, தனது காதலியான முன்னாள்
கல்லூரி மாணவியின் உதவியோடு ஒரு திட்டம் போடுகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் கொலையை தற்கொலையாக மாற்ற நவீன தொழில்நுட்ப உதவியுடன் லெனின் போடும் திட்டம் பணால் ஆகிறது. பிணம் கண்டு பிடிக்கப்பட, கொலையாளி தாக்கப்பட்ட இரும்பு ராடில் பதிந்த கைரேகை மூலம் கொலையாளியை கண்டறிய முயல்கிறது காவல்துறை.

அந்த கொலையாளி லெனின் தான் என்று காவல்துறை கண்டுபிடித்ததா?

லெனின் கொன்றது யாரை? எதற்காக? என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர், முன்னாள் கல்லூரி மாணவர் என்ற இரு வேறு நிலைகளிலும் அவரது மாறுபட்ட உடல் மொழி தேர்ந்த நடிகராக அவரை இனம் காட்டி விடுகிறது.

நாலு பேரை போட்டு புரட்டினால் நம்பக்கூடிய அந்த உடல்வாகு இவருக்கு இன்னொரு பிளஸ்.

நாயகி அஸ்மின் காதல் காட்சிகளில் வசீகரம். காதலனுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி உதவ முன் வரும் இடத்தில் நவீன ஜான்சி ராணி.

காமெடி கலந்த வில்லத்தனத்தில் அடடே யாரது…நம்ம இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரா? நிஜமாகவே அந்த எம்எல்ஏ. கேரக்டருக்கு தன் நடிப்பில் புது மெருகு சேர்த்திருக்கிறார். அவரது உதவியாளராக வரும் அனு மோகன் அப்போது சிரிப்பு பட்டாசுகளை அள்ளி வீசுகிறார்.

எம்.எல்.ஏ.யின் உறவினராக வந்து வில்ல முகம் காட்டும் சசிகுமார், கவனிக்கத்தக்க திரை வரவு. ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பனி ன் கேமரா கல்லூரி தொடர்பான காட்சிகளை இளமைத் துள்ளலு டன் படம் பிடித்திருக்கிறது.

கைலாஷ் மேனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க, பின்னணி இசை கதையின் டெம்போவை குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

கல்லூரிக் களம் மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், கிளைமாக்ஸ் திருப்பம் வரை ரசிகனின் விருப்பம் குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

முதல் காட்சியிலேயே கதைக்குள் வந்து விடும் இயக்குனர் கே.ஆர்.வினோத், முடிவு வரை வேகம் குறையாத இயக்கத்தில் தமிழ் திரைக்கு கிடைத்த நம்பிக்கை வரவாக மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

ரெட் லேபிள், இளசுகளின் கொண்டாட்டம்.

Comments (0)
Add Comment